சிங்கப்பூரின் தலைமை மருத்துவ ஆலோசகரான பேராசிரியர் கென்னத் மாக், ‘தொற்றுநோய்கள் அமைப்பு (CDA)’ எனும் புதிய அரசாங்க அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வரும் ஏப்ரல் 1ஆம் தேதி அவ்வமைப்பு அதிகாரபூர்வமாக நிறுவப்படும் என்று சுகாதார அமைச்சு திங்கட்கிழமை (மார்ச் 24) ஓர் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.
தொற்றுநோய்களைக் கண்டறிதல், தடுத்தல், கட்டுப்படுத்தல் தொடர்பான பொதுச் சுகாதாரச் செயல்பாடுகளை ஒருங்கிணைப்பதற்காக சிடிஏ அமைக்கப்படும் என்று கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி அமைச்சு முதன்முதலில் அறிவித்திருந்தது.
நோய்ப் பரவல் அச்சுறுத்தல்களில் இருந்து சிங்கப்பூரைப் பாதுகாப்பதில் அவ்வமைப்பு முக்கியப் பங்காற்றும் என்று அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
சிங்கப்பூரின் சுகாதாரத் தலைமை இயக்குநரான திரு மாக், தற்போது சிங்கப்பூரின் மருந்தக, பொதுச் சுகாதாரச் சேவைகளை மேற்பார்வையிட்டு வருகிறார். கொவிட்-19 தொற்றுப் பரவல் காலகட்டத்தில் சிங்கப்பூர்ப் பொதுச் சுகாதார நடவடிக்கைகளில் அவர் முன்னின்று பணியாற்றினார்.
சிடிஏ அமைப்பின் தலைவராக, அதன் உத்திபூர்வச் செயல்பாடுகளை வடிவமைக்கவும் நோய்ப் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கவும் அவர் உதவுவார்.
அத்துடன், எதிர்காலப் பொதுச் சுகாதாரச் சவால்களையும் பெருந்தொற்றுப் பரவல்களையும் எதிர்கொள்ளும் வகையில் சிங்கப்பூரின் ஆயத்தநிலை மேம்படுத்துவதிலும் சிடிஏ அமைப்பைப் பேராசிரியர் மாக் வழிநடத்துவார்.
அவருடன், செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல், தொடர்பியல் போன்ற துறைகளைச் சேர்ந்த வல்லுநர்களுடன் சிடிஏ குழுவில் இடம்பெற்றிருப்பர்.
தொடர்புடைய செய்திகள்
மலாய் நாளிதழான பெரித்தா ஹரியானின் ஆசிரியர் நஸ்ரி மொக்தார், கேப்பிட்டாலேண்ட் முதலீட்டு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எர்வின் இயோ, நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் தலைவர் பேராசிரியர் ஹோ டெக் ஹுவா உள்ளிட்டோரும் அவர்களில் அடங்குவர்.