‘எஸ்எம்இ’க்கள் செயற்கை நுண்ணறிவை வேகமாகப் பின்பற்றச் செய்ய உதவும் திட்டம்

‘எஸ்எம்இ’க்கள் செயற்கை நுண்ணறிவை வேகமாகப் பின்பற்றச் செய்ய உதவும் திட்டம்

கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

24 Apr 2026 - 7:48 pm

1 mins read

சிறிய, நடுத்தர நிறுவனங்கள் (எஸ்எம்இ) கூடிய விரைவில் செயற்கை நுண்ணறிவைப் பின்பற்ற வகைசெய்ய டிபிஎஸ் வங்கி, மேம்படுத்தப்பட்ட ஆக்கத்திறன் செயற்கை நுண்ணறிவுத் (generative AI) திட்டத்தை வெள்ளிக்கிழமை ‌(ஏப்ரல் 24) தொடங்கி வைத்தது.

மேம்படுத்தப்பட்டுள்ள ஸ்பார்க் ஜென்ஏஐ (Spark GenAI) திட்டத்தின் மூலம் சிறிய, நடுத்தர நிறுவனங்களின், செயற்கை நுண்ணறிவு சார்ந்த உருமாற்ற நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவது இலக்காகும். செயற்கை நுண்ணறிவைப் பின்பற்றச் செய்ய தேசிய அளவில் மேற்கொள்ளப்படும் முயற்சிகளிலும் வர்த்தக உருமாற்ற நடவடிக்கைகளிலும் இது அங்கம் வகிக்கும்.

ஸ்பார்க் ஜென்ஏஐ திட்டம் முதலில் 2024ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இப்போது அதன் மேம்படுத்தப்பட்ட வடிவத்தில் மேலும் சீரான கட்டமைப்புடன் நடவடிக்கைகள் இடம்பெறும். அந்தந்த நிறுவனங்களின் நிலைப்பாட்டைப் பொறுத்து மேம்படுத்தப்பட்ட ஸ்பார்க் ஜென்ஏஐ திட்டம் அவற்றுக்கு வழிகாட்டும்.

மேலும், அந்தந்த நிறுவனத்துக்குத் தேவையான தீர்வுகளுடன் டிபிஎஸ், குழுக்களுக்கு ஆலோசனை, தனிப்பட்ட முறையிலான அறிவுரை போன்றவற்றையும் வழங்கும். முதலில் உருவாக்கப்பட்ட ஸ்பார்க் ஜென்ஏஐ திட்டம், சிலவகை செயற்கை நுண்ணறிவுப் பயிற்சி போன்றவற்றை மட்டுமே வழங்கியது.

செயற்கை நுண்ணறிவைப் பொறுத்தவரை காணப்படும் போக்குகள் போன்றவற்றைத் தெரியப்படுத்துவதற்கான அமர்வுகள் உள்ளிட்ட சேவைகளையும் டிபிஎஸ் வழங்கும்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்டிபிஎஸ்ஏஐசெயற்கை நுண்ணறிவுதிட்டம்நடவடிக்கை