எவ்வளவு மேல்நோக்கிச் செல்கிறோம் என்பதைக் காட்டிலும் சமூகத்தில் அடிமட்டத்தில் உள்ளோரை எவ்வளவு சிறப்பாக உயர்த்தி, கைதூக்கி விடுகிறோம் என்பதே முன்னேற்றத்திற்கான அளவுகோல் என்று சட்ட அமைச்சர் எட்வின் டோங் கூறியுள்ளார்.
உள்துறை இரண்டாம் அமைச்சருமான திரு டோங், பிடாடாரி சமூக மன்றத்தில் சனிக்கிழமை (செப்டம்பர் 20) காலை ‘சட்ட விழிப்புணர்வு வாரங்கள்-2025’ நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராகப் பங்கேற்றிருந்தார்.
நீதியை எவரும் அணுகக்கூடிய நுழைவாயிலாகச் சட்டம் இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
“சட்டத்தின் ஆட்சி என்பது உயரிய லட்சியங்களைப் பற்றியது மட்டுமன்று. மாறாக அதன் உதவி யாருக்கு மிகவும் தேவைப்படுகிறதோ அவர்களை அந்தச் சட்டமுறை எவ்வாறு சென்றடைகிறது, அதன்மூலம் தேவைப்படுவோர்க்கு எவ்வளவு சிறப்பாக ஆதரவு வழங்குகிறோம் என்பதே முன்னேற்றத்திற்கான அடையாளம்,” என்றார் திரு டோங்.
சமூக மேம்பாட்டு மன்ற மேயர்கள், இலவச சட்ட சேவை வழங்கும் வழக்கறிஞர்கள், பங்காளிகள், விருந்தினர்கள் என நூற்றுக்கணக்கானோர் முன்னிலையில் பேசிய அமைச்சர், அனைத்துலக அளவில், சிங்கப்பூர் முதல்தர சட்ட அமைப்பை உருவாக்கியுள்ளது என்றார்.
மேலும், சமூகத்தில் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள எளியோரால் சட்ட அமைப்பை அணுகவோ அதன் நன்மைகளை அடையவோ முடியாவிட்டால் அது அர்த்தமுள்ளதாக இருக்காது என்றும் திரு டோங் கூறினார்.
சமூகத்தில் எவற்றை நாம் பார்க்க விழைகிறோம், எவற்றையெல்லாம் களைய முற்படுகிறோம் என்பதை நாட்டின் சட்டங்கள் பிரதிபலிப்பதாகக் குறிப்பிட்ட திரு டோங், பிளவுபட்ட உலகில் நிகழும் மாறுபட்ட சவால்கள் குறித்தும் சொன்னார்.
அண்மைக்காலமாக இணையவெளியில் அதிகரித்துவரும் வன்போலி சார்ந்த இணைய மோசடி, நிதி மோசடி சார்ந்த இணையத் தீங்குகள் சவாலாக உருவெடுப்பதாக திரு டோங் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
அவற்றிலிருந்து மக்களைக் காக்கும் வகையில் சூழல் அறிந்து நாட்டில் சட்டங்கள் இயற்றப்படுகிறது என்றும் அவர் சொன்னார்.
2015ஆம் ஆண்டு முதல் நடைபெற்றுவரும் இந்த நிகழ்ச்சியில், சட்ட விழிப்புணர்வு இலக்குடன் கைகோத்து சேவையாற்றிய பலருக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
அவ்வகையில் சட்ட கலந்துரையாடல்கள் வழங்கி நீதிச்சுடரை ஒளிரச்செய்தவர்களுக்காக வழங்கப்பட்ட சான்றிதழைப் பெற்றார் வழக்கறிஞர் ராஜன் செட்டியார்.
இந்த அங்கீகாரம் குறித்து தமிழ் முரசிடம் மகிழ்ச்சி தெரிவித்த அவர், “வழக்கறிஞர்கள் சமூகத்திற்குப் பங்களிக்க வேண்டிய கடமையைக் கொண்டுள்ளனர். இதைச் செய்வதற்கான ஒரு வழி, எளியோருக்கு இலவச சட்டச் சேவைகளை வழங்குவதாகும்,” என்றார்.
எதற்காக இந்தப் பணியைத் தொடர்ந்து செய்ய வேண்டும் என்பதற்கு இந்தப் பாராட்டுச் சான்றிதழ் அர்த்தமிகு நினைவூட்டலாக இருப்பதாகவும் திரு ராஜன் கூறினார்.
இந்த ஆண்டு இடம்பெறும் சட்ட விழிப்புணர்வு வாரங்கள் தொடர்பில் பொதுமக்களுக்குச் சட்ட விழிப்புணர்வை நல்கிடும் இலக்குடன் செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 30 வரை அநேக கருத்தரங்குகள் நேரடியாகவும் இணையம் வழியாகவும் நடத்தப்படவுள்ளன.