சிங்கப்பூரின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் குடியிருப்பாளர்களும் சமூக ஊடகங்களில் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியை (PSP) கவனிப்போரும் கடந்த சில மாதங்களாக அக்கட்சியின் புதுமுகங்களைக் கண்டிருக்கின்றனர்.
ஏழுத்தாளர் ஒருவர், ஒரு வர்த்தகர், முன்னாள் பாட்டாளிக் கட்சி உறுப்பினர்கள் இருவர் ஆகியோர் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் புதுமுகங்களில் அடங்குவர்.
எழுத்தாளர் ஸ்டெல்லா ஸ்டேன் லீ, முன்னாள் சிங்கப்பூர் உற்பத்திச் சம்மேளனத் தலைமைச் செயலாளர் லாரன்ஸ் பெக் ஆகியோர் முதலில் குறிப்பிடப்பட்டப் புதுமுகங்கள். சமூக ஊடகங்களில் கடந்த திங்கட்கிழமையன்று (டிசம்பர் 2) பதிவேற்றம் செய்யப்பட்ட அவர்கள், சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சித் தலைவர்களான டான் செங் பொக், ஹேஸல் புவா, லியோங் மன் வாய் ஆகியோருடன் கேலாங் சிராய் உணவங்காடிச் சந்தையில் மறுபயனீட்டுப் பைகளை விநியோகித்தது தெரிந்தது.
சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி பதிவேற்றம் செய்துவரும் காணொளித் தொடரில் குறிப்பிடத்தக்க இரு புதுமுகங்கள் காணப்பட்டனர். அந்தக் காணொளித் தொடர் ‘சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சித் தொண்டர்கள்’ என்ற தலைப்பில் அமைந்துள்ளது.
2011ஆம் ஆண்டு பாட்டாளிக் கட்சிக்காக நீ சூன் குழுத்தொகுதியில் போட்டியிட்ட திருவாட்டி ஏஞ்சிலா ஊன், அதே கட்சியின் முன்னாள் தொண்டரான திரு சுமர்லெக்கி அம்ஜா ஆகியோர் அந்த இருவர்.
அதேபோல், அல்ஜுனிட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த முன்னாள் பாட்டாளிக் கட்சி உறுப்பினர் லியோன் பெரேராவும் பல்வேறு நிகழ்ச்சிகளில் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சித் தலைவர்களுடன் காணப்பட்டிருக்கிறார். இவ்வாண்டின் தேசிய தின இரவு விருந்து நிகழ்ச்சி அவற்றில் அடங்கும்.
மேலும், ஆனா ரவிசந்திரன் என்பவர் திங்கட்கிழமை பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளி, ‘சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சித் தொண்டர்கள்’ காணொளித் தொடர் இரண்டிலும் காணப்பட்டார். திருவாட்டி ஆனா, ராஜ் குளோபல் என்டர்பிரைஸ் (Raj Global Enterprise) எனும் சிங்கப்பூரில் இயங்கும் தளவாட, ஏற்றுமதி நிறுவனத்தின் இயக்குநராகப் பணியாற்றுகிறார்.
அவர் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் இளையர் அணியின் எக்சிக்கியூட்டிவ் குழு உறுப்பினராக இருக்கிறார்.
தொடர்புடைய செய்திகள்
சம்பந்தப்பட்ட காணொளிகளில் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சித் தொண்டர்கள் பலர் முன்பு தேர்தலில் போட்டியிட்ட கட்சி உறுப்பினர்களுடன் தொகுதிச் சுற்றுலாவில் ஈடுபட்டதைக் காணமுடிகிறது. பெரும்பாலும் பூன் லே, தேபான் கார்டன்ஸ், தெலோக் பிளாங்கா ஆகிய வட்டாரங்களில் அவர்கள் தொகுதிச் சுற்றுலாவில் ஈடுபட்டனர்.
அந்த மூன்று பகுதிகளும் வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் அடங்கும். 2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி வெஸ்ட் கோஸ்ட்டில், மக்கள் செயல் கட்சியிடம் தோல்வியடைந்தது. மக்கள் செயல் கட்சி 51.69 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்று வென்றது.
காணொளிகளில் காணப்பட்ட அனைவரும் அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடுவரா என்று கேட்கப்பட்டதற்கு அனைவரும் களமிறக்கப்படமாட்டார்கள் என்று சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சித் தலைமைச் செயலாளர் ஹேஸல் புவா ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.