தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காலத்தின் மாற்றங்களைக் கையாள முன்னாள் சிறைக் கைதிகளுக்கு உதவி

2 mins read
e355a0da-aeed-4f14-9f43-95c0be55535b
அண்ணாதுரை பெரியசாமி (வலது), ரீகனெக்ட் உதவியாளர் முருகேசன் முத்தையா. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

திரு ஜொஹான், நான்காண்டுச் சிறைத் தண்டனையை நிறைவேற்றிவிட்டு 2017ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டார்; அதனைத் தொடர்ந்து ஃபேர்பிரைஸ் (FairPrice) பேரங்காடி ஒன்றில் வாடிக்கையாளர்கள் சொந்தமாகப் பொருள்களுக்குக் கட்டணம் செலுத்தும் வசதி இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்தார்.

ஜொஹான் என்று மட்டும் தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட அவர் திகைத்துப்போனார்.

வாடிக்கையாளர்கள் சொந்தமாகக் கட்டணம் செலுத்திப் பொருள் வாங்க வகைசெய்யும் இயந்திரங்களைப் பயன்படுத்துவது எப்படி என்பதை ரீகனெக்ட் (ReConnect) திட்டத்தைச் சேர்ந்த உதவியாளர்கள் திரு ஜொஹானுக்குக் கற்றுத் தந்தனர். அத்திட்டம், தொழில்துறை மற்றும் சேவை கூட்டுறவுச் சங்கம் (Industrial and Services Co-operative Society Limited - இஸ்கோஸ்) முயற்சியாகும்.

முன்னாள் குற்றவாளிகள், அவர்கள் குடும்பத்தார் ஆகியோர் மீண்டும் சமுகத்தில் இணைய அமைப்பு உதவிக்கரம் நீட்டுகிறது.

ரொக்கமற்ற கட்டணமுறையைப் பயன்படுத்துவது போன்ற எளிய செயல்களும் 45 வயது ஜொஹானுக்கு அச்சத்தை வரவழைத்தன.

“அதைப் பயன்படுத்த நான் பயந்தேன். நான் கற்றுக்கொண்டது உதவியாக இருந்தது,” என்றார் தற்போது லாரி ஓட்டுநராகப் பணிபுரியும் திரு ஜொஹான்.

2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ரீகனெக்ட் திட்டத்தில் சேர்ந்துள்ள 2,300 முன்னாள் குற்றவாளிகளில் அவரும் ஒருவர். சிங்பாசை எப்படிப் பயன்படுத்துவது, பொதுப் போக்குவரத்து அம்சங்களை எவ்வாறு அடையாளம் காண்பது போன்றவற்றை ரீகெனெக்ட், மூவாண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்தோருக்குக் கற்றுத் தருகிறது.

ஐந்தாண்டுச் சிறைத் தண்டனையின் கடைசி ஆண்டான 2023ல் ரீகனெக்ட்டில் சேர்ந்த 53 வயது அண்ணாதுரை பெரியசாமி, குறிப்பாக பேநவ் (PayNow) பணமாற்ற முறையைக் கற்றுக்கொண்டது மிகவும் உதவியாக இருந்ததாகச் சொன்னார். பல்வேறு குற்றங்களுக்காகப் பலமுறை சிறைக்குச் சென்றிருக்கும் திரு அண்ணாதுரை, ரீகனெக்ட் திட்டத்தில் இதர முன்னாள் குற்றவாளிகளுடன் மலர்ந்த நட்பு, தம்மைச் சரியான பாதையில் செல்ல ஊக்குவிப்பதாகவும் குறிப்பிட்டார்.

“நான் தவறு செய்தால் அவர்கள் முகத்தைப் பார்க்க முடியாது. என்னில் அவர்கள் நம்பிக்கை வைத்திருப்பதை உணர்கிறேன்,” என்றார் திரு அண்ணாதுரை.

எட்டு ஆண்டுச் சிறைத் தண்டனையை நிறைவேற்றிய முன்னாள் குற்றவாளியும் தற்போது இஸ்கோசின் துணைத் திட்ட உத்தி அதிகாரியுமான (assistant programme strategist) 51 வயது முருகேசன் முத்தையா, ரீகனெக்ட்டில் சேரும் சிலருக்குச் செயலிகளைப் பதிவேற்றம் செய்யத் தெரியவில்லை என்று தெரிவித்தார். அவர்களின் நிலையைத் தம்மால் புரிந்துகொள்ள முடிவதாக அவர் கூறினார்.

2014ஆம் ஆண்டு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு எம்ஆர்டி கட்டண அட்டையில் தொகை நிரப்பக்கூட தமக்குத் தெரியவில்லை என்றும் ரீகனெக்ட்டில் முன்னாள் குற்றவாளிகளுக்கு உதவியாளராக இருக்கும் திரு முருகேசன் நினைவுகூர்ந்தார்.

குறிப்புச் சொற்கள்