வட்டார நாடுகளின் இளையர்களிடையே ஒற்றுமைக்கு ஊக்குவிப்பு

3 mins read
43910df8-43ab-4cf8-9786-2363f51e7a0e
தென்கிழக்காசிய நாடுகளைச் சேர்ந்த இளையர்களுடன் மனிதவளத் துணையமைச்சர் தினேஷ் வாசு தாஸ் தம்படம் எடுத்துக்கொண்டார். - படம்: கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சு 

என்றென்றும் நீடித்திருக்கக்கூடிய அமைதி, காரணமின்றி வாய்ப்பதில்லை; அத்தகைய அமைதிக்கு அனைவரது ஒட்டுமொத்த முயற்சியும் தேவைப்படுவதாக மனிதவளத் துணையமைச்சர் திரு தினேஷ் வாசு தாஸ் தெரிவித்துள்ளார்.

“ஒருவரையொருவர் மதிப்பதும், பார்ப்பதற்கு நம்மைப் போல அல்லாதோருக்கும் மதிப்பு அளிப்பதும், புரிந்துணர்வுடன் இருந்து தொடர்பு வட்டங்களின்வழி பயன்தரும் கலந்துரையாடல்களுக்கு ஏற்பாடு செய்வதும் முக்கியம்,” என்றும் திரு தினேஷ் கூறினார்.

தென்கிழக்காசிய வட்டார அளவில், ‘அமைதிக்கான வெற்றியாளர்கள்’ (Champions for Peace) என்ற தலைப்பிலான பயிலரங்கில் திங்கட்கிழமை (ஜனவரி 26) பேசியபோது அவர் இவ்வாறு கூறினார்.

இந்தோனீசியா, மலேசியா, பிலிப்பீன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த இளம் பேராளர்களுக்குப் பயிற்சி வழங்கி, அவரவர் சமுதாயத்தில் மீள்திறனை வளர்ப்பது இந்தத் திட்டத்தின் நோக்கம்.

உள்ளூர் நல்லிணக்க அமைப்பான ‘ஹேஷ்.பீஸ்’ (Hash.peace), ‘கோஃபி அனான்’, ‘கிரிஸ் ஃபோர் பீ’ ஆகிய அமைப்புகள் இணைந்து இந்தத் திட்டத்தை நடத்துகின்றன.

“சிங்கப்பூர் சீன நாடாகவோ, மலாய் நாடாகவோ, இந்திய நாடாகவோ இருக்காது என்று சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூ தெரிவித்தார். இங்கு மிகப் பெரும்பான்மை இனத்தவர்களாகச் சீனர்கள் இருந்தாலும் இது எல்லாச் சிங்கப்பூரர்களுக்குமான நாடு என்று திரு லீ அன்று கூறியிருந்தார். ஒருசாரார் மட்டும் ஆதிக்கம் செலுத்தக்கூடிய நிலை இல்லாததால் எல்லாரும் ஒருவரையொருவர் மதிக்க வேண்டும்,” என்று திரு தினேஷ் கூறினார்.

எல்லா இனத்தவரையும் ஒன்றுசேர்க்கும் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளில் உள்ள இன ஒருங்கிணைப்புக் கொள்கையைத் திரு தினேஷ் சுட்டினார். சிங்கப்பூரில் இன அடிப்படையிலான குடியிருப்புகள் உருவாவதை இது தடுக்கும் என்றும் அவர் கூறினார்.

“இன, சமய பாகுபாடின்றி மாணவர்கள் பள்ளிகளுக்கும் தேசிய சேவைக்கும் செல்கின்றனர். ஒருமைப்பாட்டைத் தொடர்ந்து உறுதிசெய்ய, கொள்கைசார்ந்த இந்த விதிமுறைகள் நடப்பில் உள்ளன,” என்றார் துணையமைச்சர்.

சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம் (சிண்டா) உள்ளிட்ட சுய உதவிக்குழுக்களின் செயல்பாட்டுக்கு உறுதுணையாகக் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சு உருவாக்கிய ‘நல்லிணக்க வட்டம்’ (Racial and Religious Harmony Circle) அமைப்பு இருப்பதாகவும் திரு தினேஷ் குறிப்பிட்டார்.

2019ல் தொடங்கப்பட்ட ஐசிசிஎஸ் (ICCS) எனப்படும் சமுதாயங்களுக்கான அனைத்துலக மாநாட்டைப் பற்றியும் குறிப்பிட்ட துணையமைச்சர், கடந்தாண்டின் மாநாட்டில் 3,000 ஆய்வாளர்கள் கலந்துகொண்டதையும் சுட்டினார். அதில் 52 நாடுகளைச் சேர்ந்த இளையர்களின் ஈடுபாடு அதிகம் இருந்ததாகக் குறிப்பிட்ட திரு தினேஷ், இளையர்கள் பொறுப்பேற்று விவகாரங்களை எதிர்கொண்டால் உண்மையான நல்ல மாற்றங்கள் நடைமுறையில் நிகழக்கூடும் என நம்பிக்கை தெரிவித்தார்.

தென்கிழக்காசியாவின் பன்முகத்தன்மையால் இந்த வட்டாரம் சிதைந்துவிடக் கூடாது எனக் குறிப்பிட்ட திரு தினேஷ், இளையர்கள் ஒருவரோடு ஒருவர் உறவுகளை வளர்ப்பது முக்கியம் என்றார்.

“எனவே உங்களுக்குள்ளே பேசுவதற்கான (சமூக ஊடகக்) குழுக்களை அமைக்க நான் ஊக்குவிக்கிறேன். நீங்கள் எதிர்நோக்கும் ஒரு பிரச்சினைக்குத் தென்கிழக்காசிய நாடு ஒன்றில் தீர்வு இருக்கக்கூடும்,” என்று அவர் கூறினார்.

‘மெண்டல் ஆக்ட்’ (Mental ACT) இளையர் மனநலன் ஆர்வலர் அமைப்பின் இயக்குநரும் ‘ஹேஷ்.பீஸ்’ அமைப்பில் வழிகாட்டியாகவும் உள்ள தேவன் தமிழ்ச்செல்வி, வட்டார அளவில் விரியும் இந்தத் திட்டத்தில் மனநலம் சார்ந்த நிபுணத்துவத்தைக் கொண்டுவருகிறார்.

தனிநபர்களின் மனங்கள் நிலைத்தன்மையுடன் இருப்பது ஒற்றுமை, நல்லிணக்கம் போன்ற சமுதாய அளவிலான நன்மைகளுக்கு வித்திடும் என்பது இவரது நிலைப்பாடு.

“மனத்தளவில் பாதுகாப்பாக உணர்பவர்களே நல்லிணக்கத்திற்கான பாலங்களை அமைக்கத் தயாராக இருப்பவர்கள். பாதுகாப்புக் குறைபாடு ஏற்படும்போது பதற்றம் மனத்தைச் சூழ்கிறது. எனவே, பிறருக்கு மனநல ஆதரவு வழங்க இளையர்களுக்குக் கற்பிக்கும் பணியில் ஈடுபடுகிறேன்,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்