தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புரோப்நெக்ஸ் மீது சொத்து வாங்கியோர் வழக்கு

2 mins read
215f0302-182a-4c8d-9a50-b5ec9099ec7c
கோப்புப் படம்: - ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சொத்து முகவை நிறுவனமான புரோப்நெக்ஸ் ரியல்டி மீது சொத்து வாங்கியோர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

‘99-to-1’ என்றழைக்கப்படும் முறையைப் பயன்படுத்தியதால் வரி அதிகாரிகள் தங்கள் மீது நடவடிக்கை எடுத்ததைத் தொடர்ந்து அவர்கள் புரோப்நெக்ஸ் மீது வழக்கு தொடுத்துள்ளனர். ‘99-to-1’ முறையைக் கொண்டு வாங்கிய சொத்துகளுக்கான, கூடுதல் வாடிக்கையாளர் முத்திரை வரியை (ABSD) அவர்கள் குறைக்க முயன்றிருக்கின்றனர்.

சம்பந்தப்பட்ட பரிவர்த்தனைகளில் ஈடுபட்ட சொத்து முகவர்கள், சட்ட நிறுவனங்கள் மீதும் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

ஒரு வழக்கில் புரோப்நெக்ஸ், சொத்து முகவர் ஏமஸ் கோ, சிகே டான் லா கார்ப்பரே‌ஷன் (CK Tan Law Corporation) நிறுவனம் ஆகிய தரப்பினர் மீது ஒரு தம்பதியர் வழக்கு தொடர்ந்துள்ளனர். ரிவியேர் கொண்டோமினியம் திட்டத்தில் ஒரு வீடு வாங்கிய பின்னர் சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையத்திடம் கட்டணம் செலுத்தவேண்டியிருந்ததைத் தொடர்ந்து திரு கெவின் ரஹிம், 28, திருவாட்டி ஜெசிக்கா டியிட்ரா, 32, இருவரும் கிட்டத்தட்ட 850,000 வெள்ளி இழப்பீடு கேட்டு வழக்கு தொடுத்துள்ளனர்.

மற்றொரு வழக்கில் புரோப்நெக்ஸ், சொத்து முகவர் ஈயன் சிங், சிட்டி லா (City Law) சட்ட நிறுவனம் ஆகிய தரப்புகள் மீது 43 வயது மெல்வின் லி வழக்கு தொடர்ந்துள்ளார். பிக்கடில்லி கிரேண்ட்டில் உள்ள தனது தந்தைக்குச் சொந்தமான ஒரு வீட்டிலும் புல்மன் ரெசிடன்சசில் உள்ள தனது தாயின் வீட்டிலும் ஒரு விழுக்காடு பங்கை வாங்கிய பிறகு அவர் உள்நாட்டு வருவாய் ஆணையத்திடம் கட்டணம் செலுத்தவேண்டியிருந்தது. அதனையடுத்து அவர் கிட்டத்தட்ட 1.2 மில்லியன் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.

இரு வழக்குகளிலும், ‘99-1’ முறை சட்டபூர்வமானதா என்பதை நிர்ணயிக்க சொத்து முகவர்களின் ஆலோசனையைத் தாங்கள் நம்பியிருந்ததாக சொத்தை வாங்கியவர்கள் கூறுகின்றனர்.

சொத்து முகவர்களின் செயல்களுக்குத் தாங்கள் பொறுப்பேற்க முடியாது என்று புரோப்நெக்ஸ் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.

குறிப்புச் சொற்கள்