முன்மொழியப்பட்ட ‘ஆர்டிஎஸ் லிங்க்’ கட்டணம் கட்டுப்படியானதாக இருக்கும்: மலேசியர்கள் கருத்து

முன்மொழியப்பட்ட ‘ஆர்டிஎஸ் லிங்க்’ கட்டணம் கட்டுப்படியானதாக இருக்கும்: மலேசியர்கள் கருத்து

2 mins read
79c38b52-024e-4744-9970-bf8411452a10
‘ஆர்டிஎஸ் லிங்க்’ வழி, ஜோகூர் பாருவில் உள்ள புக்கிட் சாகாரிலிருந்து சிங்கப்பூரின் உட்லண்டஸ் நார்த் ரயில் நிலையத்துக்கு நேரடியாக ஐந்து நிமிடங்களில் செல்லமுடியும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஜோகூர் பாரு - சிங்கப்பூர் விரைவு ரயில் சேவைக்காக (ஆர்டிஎஸ்) முன்மொழியப்பட்டுள்ள $5 முதல் $7 வரையிலான கட்டணம் மலேசிய அலுவலக ஊழியர்களுக்கு பெரும்பாலும் கட்டுப்படியாகக்கூடியதாக இருக்கும்.

இருப்பினும், ஜோகூர் கடற்பாலம்வழி பேருந்திலோ மோட்டார்சைக்கிளிலோ பயணம் செய்வோர்க்கு அது விலைமிக்கதாக இருக்கக்கூடும் என்று ஊழியர்கள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஊடகத்திடம் கூறினர்.

மலேசியப் போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக், முன்மொழியப்பட்ட கட்டணங்கள் குறித்து பிப்ரவரி 13ஆம் தேதி வெளியான அறிக்கையில் தெரிவித்தார்.

‘ஆர்டிஎஸ் லிங்க்’ சேவைக்கான செயல்பாடுகளை இவ்வாண்டு இறுதிக்குள் தொடங்கத் திட்டம் உள்ளது. அதன்வழி, ஜோகூர் பாருவில் உள்ள புக்கிட் சாகாரிலிருந்து சிங்கப்பூரின் உட்லண்டஸ் நார்த் ரயில் நிலையத்துக்கு நேரடியாக ஐந்து நிமிடங்களில் செல்லமுடியும்.

இவ்வாண்டின் இரண்டாம் பாதியில் கட்டணங்கள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, சிங்கப்பூரில் சுற்றுலா நிர்வாகியாகப் பணிபுரியும் மலேசியரான லூ யொங் டாட் என்பவர், முன்மொழியப்பட்ட கட்டணங்கள் தமக்கு வசதியாக உள்ளதாகக் கூறினார்.

கட்டணங்களைப் பொறுத்து, சிங்கப்பூரில் தளம் கொண்டுள்ள மலேசிய ஊழியர்கள் பணத்தைச் சேமிக்க, ஜோகூர் பாருவில் தங்குவதற்கு ‘ஆர்டிஎஸ் லிங்க்’ அவர்களை ஊக்குவிக்கலாம் என்றார் திரு லூ.

இருப்பினும், திரு சைஃபுல் அப்துல்லா என்பவர், அன்றாடம் ‘ஆர்டிஎஸ் லிங்க்’ சேவையைப் பயன்படுத்துவது பற்றி யோசிக்கவேண்டும் என்று கூறினார். வாடிக்கையாளர் சேவை உதவியாளராகப் பணிபுரியும் அவர், தினமும் ஜோகூர் பாருவில் உள்ள அவரது வீட்டிலிருந்து, சாங்கி விமான நிலையத்திற்கு மோட்டார்சைக்கிளில் செல்வார்.

ஒவ்வொரு பயணத்திற்கும் $5 முதல் $7 வரை செலுத்துவது சற்று அதிகமாக இருக்கும் என்று அவர் கூறினார்.

உத்தேசக் கட்டணங்கள் குறித்து கருத்துக் கேட்க, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஊடகம் ‘ஆர்டிஎஸ் ஆப்பரேஷன்ஸ்’ நிறுவனத்தைத் தொடர்புகொண்டது.

குறிப்புச் சொற்கள்