அரசுத்தரப்பு: பிரித்தமின் ஆதாரங்கள் நம்பகத்தன்மை அற்றவை

3 mins read
816466eb-4e98-4ae7-ae94-15f9939d6948
பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங் வியாழக்கிழமையன்று மூன்றாவது நாளாக நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங் மீதான விசாரணையின்போது கேள்விக்கணைகளை அடுக்கடுக்காக வீசிய அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஆங் செங் ஹோங், திரு சிங்கின் ஆதாரங்கள் நம்பகத்தன்மை அற்றவை என்றும் நியாயத்திற்கு முரணானவை என்றும் சாடியுள்ளார்.

நாடாளுமன்ற சிறப்புரிமைக் குழுவின் முன்னிலையில் திரு சிங் பொய்யுரைத்ததாகக் குறிப்பிடும் இரண்டு குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை, வியாழக்கிழமை (நவம்பர் 7) பன்னிரண்டாவது நாளாக நடந்தது.

2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கும் செப்டம்பர் மாதத்திற்கும் இடையே திருவாட்டி கான் பார்ப்பதற்குச் சாதாரணமாகவே இருந்த நிலையில், நாடாளுமன்றத்தில் உண்மையைக் கூறும்படி அவரிடம் திரு சிங் ஏன் சொல்லவில்லை என்று வழக்கறிஞர் கேட்டார்.

“நீங்கள் அதுபற்றி கேட்டால் திருவாட்டி கான் மயங்கி விழுவார் என நினைத்தீர்களா?” என்று திரு ஆங் கிண்டலாகக் கேட்டார்.

இல்லை என்று பதிலளித்த திரு சிங், பொறுப்புள்ள நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் திருவாட்டி கான், தாமாகவே முன்வந்து இந்த விவகாரத்தைப் பற்றி பேசுவார் என நினைத்ததாகக் கூறினார்.

இதனை ஏற்க மறுத்தார் திரு ஆங்.

திரு சிங் இந்தக் காலகட்டத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதும் கட்சியின் மற்ற தலைவர்களான திருவாட்டி லிம், திரு மனாப் ஆகியோருடன் இதுகுறித்துக் கலந்துரையாடவில்லை என்பதும் பாட்டாளிக் கட்சியினர் இந்த விவகாரத்தை மூடி முறைக்க முயன்றார்கள் என்ற உண்மையுடன் ஒத்துப்போவதாக வழக்கறிஞர் ஆங் வாதிட்டார்.

பிறகு, கட்சியிலிருந்து திருவாட்டி கானை நீக்க நினைத்திருந்த தலைவர்கள் அவர்களே ஒழுங்குமுறைக் குழுவில் அமர்வது ஏற்புடையதா என்று திரு ஆங் கேட்டிருந்தார்.

அவ்வாறு செய்தது கடமைக்கும் சொந்த நலனுக்கும் இடையிலான முரண்பாட்டைக் காட்டுவதாக அவர், அதற்கான காரணங்களையும் விளக்கினார்.

விசாரணையின் தொடக்கத்தில் திரு ஆங், 2021 அக்டோபர் 3ஆம் தேதியன்று திருவாட்டி கானிடம் அவரை எடைபோடப்போவதில்லை என்று திரு சிங் கூறியதன் பொருள் குறித்துக் கேள்வி எழுப்பினார்.

சரியான ஒன்றைச் செய்யப்போவதாக ஒருவர் அறிவித்தால் எடை போடுவதற்கு என்ன உள்ளது என்றும் பொதுவாகவே தவறு செய்யப்போகிறவர்களைப் பார்த்துத்தான் இப்படிப்பட்ட சொற்கள் சொல்லப்படும் என்றும் திரு ஆங் குறிப்பிட்டார்.

“உண்மை என்னவென்றால், பொய்யைத் தொடர்வதற்கான அனுமதியை நீங்கள்தான் ரயீசா கானுக்குத் தந்தீர்கள். அதனால்தான் அவரை எடைபோடமாட்டேன் எனச் சொன்னீர்கள். அதனால்தான் அவர் நிம்மதியுடன் காணப்பட்டார்,” என்றார் திரு ஆங்.

அத்துடன், நாடாளுமன்ற சிறப்புரிமைக் குழுவின் விசாரணை நடைபெறுவதற்கு முன்னர் இந்தப் பொய்யைப் பற்றித் தங்களுக்கு ஏற்கெனவே தெரியும் என்பதைக் காட்டுவதற்காக கட்சித் தலைவர்கள் மூவரும் 2021 டிசம்பர் 2ஆம் தேதி செய்தியாளர் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ததாக அரசுத் தரப்பு வாதிட்டது.

பொய் சொல்லப்பட்ட விவரம் தங்களுக்குத் தெரியும் என்பதைக் கட்சித் தலைவர்கள் செய்தியாளர் கூட்டத்திற்கு முன்னதாக பாட்டாளிக் கட்சியின் மத்திய செயற்குழுவிடம் தெரிவிக்கவில்லை என்பதை திரு சிங் நீதிமன்றத்தில் உறுதிசெய்தார்.

அதற்கு அடுத்து, நாடாளுமன்ற சிறப்புரிமைக் குழுவின் விசாரணைக்கு முன்னதாக திரு சிங், திருவாட்டி லிம், திரு மனாப் ஆகியோர் சந்தித்து தங்களது ஆதாரங்களை ஒன்றோடு ஒன்று பொருந்தும் வகையில் திருத்திக்கொண்டதாக திரு ஆங் குற்றம் சாட்டினார்.

இதைத் திரு சிங் மறுத்தார். இருந்தபோதும், பாட்டாளிக் கட்சியின் முன்னாள் உறுப்பினர்கள் லோ பெய் யிங், யுதிஷ்த்ரா நாதன் ஆகியோர் சிறப்புரிமைக் குழுவிடம் கூறிய விவரங்கள் குறித்த கலந்துரையாடல் தங்கள் சந்திப்புகளில் நிகழ்ந்திருக்கக்கூடும் என அவர் ஒப்புக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்