சதுப்புநிலங்களைப் பாதுகாப்பது, மேம்பாட்டுப் பணிகள் தீவிரமாக நடக்கும் பகுதிகளில் கடற்கரைப் பாதைகளை (coastal corridors) அமைப்பது ஆகிய நடவடிக்கைகள் சதுப்புநில, கடற்கரை குதிரைலாட நண்டு வகைகளைக் (mangrove, coastal horseshoe crabs) காக்க உதவக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்விரண்டும் ஆசிய கண்டத்தில் கடற்படுக்கைகளில் பகுதிகளில் காணப்படும் நண்டு வகைகளாகும்.
சிங்கப்பூர், இந்தோனீசியா, தாய்லாந்து போன்ற தென்கிழக்காசிய நாடுகளில் சதுப்புநில, கடற்கரைக் குதிரைலாட நண்டுகளைக் காணலாம். அவை பார்ப்பதற்கு ஆதிகாலத்து விலங்குகளைப்போல் இருக்கும்.
அழிந்துபோகக்கூடிய அபாயத்தை எதிர்கொள்ளும் அவற்றுக்குப் பாதுகாப்பு முயற்சிகள் கைகொடுக்கக்கூடும் என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உயிரியல் நிபுணர்கள் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
“இந்த விலங்கு வகைகளைப் பாதுகாக்க முதலில் அடிப்படை அம்சங்களை அலசுவது மிக முக்கியம். அவற்றின் மொத்த எண்ணிக்கை தொடர்பான அம்சங்கள், வரலாற்றில் அவை உருவெடுத்த விதம், பருவநிலை மாற்றத்தால் அவை பாதிக்கப்படக்கூடிய விதம் ஆகியவற்றை ஆராயவேண்டும்,” என்று ஆய்வை மேற்கொண்ட ஆய்வாளர்க் குழுவை வழிநடத்திய துணைப் பேராசிரியர் ஃபிராங்க் ரைன்ட் தெரிவித்தார். அவர், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் அறிவியல் பள்ளியின் உயிரியல் அறிவியல் பிரிவில் பணியாற்றுகிறார்.
வெவ்வேறு வகையான குதிரைலாட நண்டுக் ‘குடும்பங்கள்’ காலப்போக்கில் எவ்வாறு மாறின, ஒவ்வொரு வகையும் பருவநிலை மாற்றத்தை எவ்வாறு எதிர்கொண்டன போன்ற அம்சங்கள் ஆய்வில் ஆராயப்பட்டன.
எடுத்துக்காட்டாக, மண்டாய் சதுப்புநிலம், சுங்கை புலோ ஈரநிலக் காப்பகம் ஆகியவற்றில் காணப்படும் சதுப்புநில குதிரைலாட நண்டுகள் பொதுவாக வாழ்நாளைக் குறிப்பிட்ட இடத்தில்தான் கழிக்கும்; அதேநேரம், கடற்கரை குதிரைலாட நண்டுகள் கூடுதலாக நடமாடும் போன்ற விவரங்கள் ஆய்வில் தெரிய வந்தன.
கடற்கரை குதிரைலாட நண்டுகளை ஈஸ்ட் கோஸ்ட் புங்காவின் கடற்கரைப் பகுதிகளில் காணலாம்.
தொடர்புடைய செய்திகள்
சதுப்புநில குதிரைலாட நண்டுகளைக் காக்க சதுப்புநிலப் பகுதிகளைப் பாதுகாக்கலாம் என்று ஆய்வை மேற்கொண்ட ஆய்வாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.
கடற்கரைப் பகுதிகள் மேம்படுத்தப்படும்போது கடற்கரை குதிரைலாட நண்டுகள் அழிந்துபோகும் அபாயம் ஏற்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் கடற்கரை குதிரைலாட நண்டுகள் வசிக்கும் பகுதிகளுக்கிடையே உள்ள இடங்களைக் கடற்கரைப் பாதைகளாக உருவெடுக்கச் செய்யலாம் என்றும் ஆய்வாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.