தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வசதி குறைந்தோரின் உணவுப் பாதுகாப்பை மேம்படுத்தும் ‘புரத உறுதிமொழி’

2 mins read
f84dd3ce-b7bc-40db-b910-21fff64f3721
‘ஃபேர்பிரைஸ்’ குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி விபுல் சாவ்லா பயனாளர்களுக்கு முட்டைகள் வழங்கினார். - படம்: ‘ஃபேர்பிரைஸ்’ குழுமம்
multi-img1 of 2

‘ஃபேர்பிரைஸ்’ அறக்கட்டளை அடுத்த ஐந்து ஆண்டுகளில் $1 மில்லியன் மதிப்பிலான புரதச்சத்து மிக்க உணவுப் பொருள்களை வசதி குறைந்தோருக்கு விநியோகம் செய்யவிருக்கிறது.

‘புரத உறுதிமொழி’ (Protein Pledge) என்று அழைக்கப்படும் அந்த உதவித் திட்டம், குறைந்த வருமானக் குடும்பங்கள், பராமரிப்பு இல்லங்களில் உள்ள மூத்தோர், குழந்தைகள், இளம் வயதினர், வெளிநாட்டு ஊழியர்கள் போன்றோருக்கு ஆதரவாக இருக்கும்.

வசதி குறைந்தோரின் உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்யும் ‘ஃபேர்பிரைஸ்’ அறக்கட்டளையின் முயற்சிகளில் ‘புரத உறுதிமொழித்’ திட்டமும் அடங்கும்.

குட்லைஃப்! மக்கான் (Goodlife! Makan) சமூகச் சமையலறையில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 25) நடைபெற்ற திட்டத்தின் அறிமுக நிகழ்ச்சியில் மரீன் டெரஸ் வட்டாரத்தில் வசிக்கும் மூத்தோர் 35 பேர் கலந்துகொண்டனர்.

‘புரத உறுதிமொழி’ அறிமுக நிகழ்ச்சியில் மரீன் டெரஸ் வட்டாரத்தில் வசிக்கும் 35 முதியவர்கள் கலந்துகொண்டனர்.
‘புரத உறுதிமொழி’ அறிமுக நிகழ்ச்சியில் மரீன் டெரஸ் வட்டாரத்தில் வசிக்கும் 35 முதியவர்கள் கலந்துகொண்டனர். - படம்: சாவ்பாவ்

சிங்கப்பூரர்களின் மாறிவரும் உணவுப் பழக்கங்கள், விருப்பங்கள், சவால்கள் குறித்த ‘எ ஃபுல் பிளேட்’ (A Full Plate) என்ற ஆய்வை அறக்கட்டளை அண்மையில் நடத்தியது.

வசதி குறைந்த பின்னணியில் உள்ளோர் நன்கொடையாக வழங்கப்படும் பதப்படுத்தப்பட்ட அல்லது பெட்டியில் அடைக்கப்பட்ட உணவுகளைவிடப் புரதச்சத்து மிக்க புதிய உணவுகளை விரும்புவதாக ஆய்வு முடிவில் தெரியவந்தது.

அதற்கேற்றவாறு ‘புரத உறுதிமொழித்’ திட்டத்தின்கீழ், பல்வேறு சமூக அமைப்புகளின் தேவைகளுக்கு ஏற்ப முட்டை உள்ளிட்ட புரத உணவுப் பொருள்கள் வழங்கப்படும்.

புரதச்சத்துள்ள உணவு ஆரோக்கியமான உணவுமுறையின் முக்கிய அங்கமாக விளங்குகிறது. வசதி குறைந்தோர் அதை எளிதில் பெறும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ‘ஃபேர்பிரைஸ்’ குழுமத் தலைமை நிர்வாக அதிகாரியும் அறக்கட்டளை வாரிய உறுப்பினருமான விபுல் சாவ்லா கூறினார்.

“புரதச்சத்துள்ள உணவுகளை வசதி குறைந்தோரிடம் கொண்டுசேர்ப்பதன்வழி அவர்கள் எதிர்கொள்ளும் உணவு, ஊட்டச்சத்துக் குறைப்பாடுகளைக் குறைக்க நினைக்கிறோம்,” என்றார் அவர்.

தற்போது 18 சமூக அமைப்புகள் ‘புரத உறுதிமொழித்’ திட்டத்தில் இணைந்துள்ளன. இதன்மூலம் 46,000க்கும் அதிகமானோர் பயனடைவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திட்டத்தில் இணைந்திருக்கும் அனைத்து அமைப்புகளும் புரதச்சத்துள்ள உணவாக முட்டையைத் தெரிவுசெய்துள்ளதாக அறக்கட்டளை குறிப்பிட்டது.

திட்ட அறிமுக நிகழ்ச்சியில் சமூகச் சமையல் போட்டியும் நடத்தப்பட்டது. அதில் வெற்றிபெற்ற முதியவர் $150 மதிப்புள்ள ‘ஃபேர்பிரைஸ்’ பற்றுச்சீட்டுகளைத் தட்டிச்சென்றார்.

சமூகச் சமையல் போட்டியில் முதியவர் சிலரும் ‘ஃபேர்பிரைஸ்’ அதிகாரிகளும் இணைந்து கலந்துகொண்டனர்.
சமூகச் சமையல் போட்டியில் முதியவர் சிலரும் ‘ஃபேர்பிரைஸ்’ அதிகாரிகளும் இணைந்து கலந்துகொண்டனர். - படம்: சாவ்பாவ்

நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் முட்டைகள், பழங்கள், ‘ஃபேர்பிரைஸ்’ பற்றுச்சீட்டுகள் போன்றவை அடங்கிய அன்பளிப்புப் பைகள் வழங்கப்பட்டன.

திட்டத்தில் பங்கேற்கும் அமைப்புகளுக்கு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் முட்டைகளும் புரதச்சத்துள்ள இதர உணவுப் பொருள்களும் விநியோகிக்கப்படும். வசதி குறைந்தோருக்கு ஆதரவு வழங்கும் அமைப்புகள் go.fpg.sg/protein-pledge என்ற இணையத்தளம்வழி ‘புரத உறுதிமொழித்’ திட்டத்தில் இணைய விண்ணப்பம் செய்யலாம்.

குறிப்புச் சொற்கள்