சிங்கப்பூரின் ஃபேர்பிரைஸ் பேரங்காடிகளில் பிப்ரவரி 5 முதல் 16 வரை $100க்குப் பொருள்களை வாங்கும் ஒவ்வொருவரும் $8 பற்றுச்சீட்டைப் பெறுவர்.
ஒவ்வொரு $100க்கும் $8 பற்றுச்சீட்டு வழங்கப்படும். ஒரு பரிவர்த்தனையில் நான்கு பற்றுச்சீட்டுகள் வரை வாடிக்கையாளர்கள் பெறலாம்.
அந்தப் பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்தி மார்ச் 3 வரை பொருள்களை வாங்கலாம். அதற்கு எவ்வித நிபந்தனையும் இல்லை என்று ஃபேர்பிரைஸ் குழுமம் பிப்ரவரி 5ஆம் தேதி (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சீனப் புத்தாண்டு பிப்ரவரி 17ஆம் தேதி பிறக்கிறது. புத்தாண்டு விழாக்காலத்தின்போது செலவுசெய்யும் சிங்கப்பூரர்களுக்கு உதவும் நோக்கில் பற்றுச்சீட்டு சலுகை வழங்கப்படுவதாகக் குழுமம் தெரிவித்துள்ளது.
புத்தாண்டுக்கு முந்தின நாளான பிப்ரவரி 16 வரை பற்றுச்சீட்டுச் சலுகை நடப்பில் இருக்கும் என்றும் அது குறிப்பிட்டுள்ளது.
“சீனப் புத்தாண்டுக்கு இரண்டு வாரங்களுக்குக் குறைவான காலமே உள்ளதால் பல சிங்கப்பூரர்கள் தங்களது விழாக்கால ஏற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டிருப்பர்,” என்று குழுமத்தின் தலைமை நிர்வாகி விபுல் சாவ்லா அறிக்கையில் கூறியுள்ளார்.
சீனப் புத்தாண்டின் முதல் நாளான பிப்ரவரி 17ஆம் தேதி, 156 ஃபேர்பிரைஸ் பேரங்காடிகள் திறந்திருக்கும் என்று குழுமம் கடந்த திங்கட்கிழமை (பிப்ரவரி 2) தெரிவித்திருந்தது.
அவற்றில் 42 பேரங்காடிகள் 24 மணி நேரமும் திறந்திருக்கும் என்றும் 113 பேரங்காடிகள் மாலை 5 மணிக்கு மூடப்படும் என்றும் அது கூறியது.
தொடர்புடைய செய்திகள்
இருப்பினும், ஃபேர்பிரைஸ் இணையத்தளம் மூலமும் வாடிக்கையாளர்கள் பொருள்களைத் தொடர்ந்து வாங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் மொத்தம் 168 ஃபேர்பிரைஸ் பேரங்காடிகள் உள்ளன.

