தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜூரோங் வட்டார, குறுக்குத் தீவு ரயில் பாதைகளின் பசுமைத் திட்டங்களுக்கு $2.8 பி. ஒதுக்கீடு

2 mins read
34364291-741e-4da9-81ee-7d23083246ab
ஜூரோங் வட்டார ரயில் பாதையும் குறுக்குத் தீவு ரயில் பாதையும் முழுமையாகச் செயல்படும்போது ஆண்டுதோறும் 100,000 முதல் 120,000 டன்வரை கரியமிலவாயு வெளியேற்றத்தைக் குறைக்க முடியும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பசுமைப் பங்குப் பத்திரங்களிலிருந்து சென்ற ஆண்டு (2024) கிடைத்த $2.8 பில்லியன் தொகை ஜூரோங் வட்டார ரயில் பாதை, குறுக்குத் தீவு ரயில் பாதை ஆகியவற்றின் நிதி மூலதனச் செலவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சு திங்கட்கிழமை (செப்டம்பர் 29) வெளியிட்ட 2024ஆம் நிதியாண்டுக்கான சிங்கப்பூர்ப் பசுமைப் பங்குப் பத்திர அறிக்கையில் அந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது.

பங்குப் பத்திரங்களிலிருந்து பெறப்படும் எஞ்சிய $3.6 பில்லியன் தொகை முழுமையாக அடுத்த ஆண்டு (2026) இறுதிக்குள் இரண்டு ரயில் பாதைகளுக்கும் ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் அலுவலக அமைச்சரும் இரண்டாம் நிதி, தேசிய வளர்ச்சி அமைச்சருமான திருவாட்டி இந்திராணி ராஜா அறிக்கை குறித்துக் கருத்துரைத்தார்.

பசுமை உள்கட்டமைப்புக்கு நிதி ஒதுக்கவும் வலுவான பசுமைப் பங்குப்பத்திரத் திட்டத்துக்கு ஆதரவளிக்கவும் சிங்கப்பூர் கொண்டுள்ள கடப்பாட்டை அறிக்கை பிரதிபலிப்பதாக அவர் சொன்னார்.

சிங்கப்பூர், பருவநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய தாக்கத்தைத் தணிப்பதற்குச் சில இலக்குகளை வகுத்துள்ளது. அந்த இலக்குகளை எட்டவும் வட்டாரத்தில் சுற்றுச்சூழலுக்கு உகந்த நடவடிக்கைகளை எடுக்கவும் நாடு தொடர்ந்து முயற்சிகளை எடுக்கும் என்றார் பசுமைப் பங்குப் பத்திர வழிகாட்டிக் குழுவுக்குத் தலைவருமான திருவாட்டி இந்திராணி ராஜா.

ஜூரோங் வட்டார ரயில் பாதை, குறுக்குத் தீவு ரயில் பாதை ஆகியவற்றின் உருவாக்கம், சிங்கப்பூர்ப் பசுமைத் திட்டம் 2030க்கு ஆதரவாக இருக்கும். அதன்வழி நாட்டின் ரயில் கட்டமைப்பை 360 கிலோமீட்டருக்கு விரிவுபடுத்துவது நோக்கம்.

2050ஆம் ஆண்டுக்குள் கரியமிலவாயு வெளியேற்றத்தை அறவே குறைக்கத் திட்டமிட்டுள்ளது சிங்கப்பூர். நிலப் போக்குவரத்திலிருந்து வெளியாகும் கரியமிலவாயு 2016ல் உச்சத்திலிருந்தது. அதை 2040ஆம் ஆண்டுக்குள் அகற்றவும் சிங்கப்பூர் எண்ணியுள்ளது.

இரு ரயில் பாதைகளும் முழுமையாகச் செயல்படும்போது ஆண்டுதோறும் 100,000 முதல் 120,000 டன்வரை கரியமிலவாயு வெளியேற்றத்தைக் குறைக்க முடியும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்தது. அது சிங்கப்பூரின் சாலைகளிலிருந்து குறைந்தது 22,000 பெட்ரோல் அல்லது டீசல் கார்களை அகற்றுவதற்குச் சமம்.

குறிப்புச் சொற்கள்