வாடகை வாகனச் சேவைகளை வழங்கும் தடா தளத்தில், பயணிகள் ரத்துசெய்யும் ஒவ்வொரு பயணத்துக்கும் ஓட்டுநர்களுக்கு இனி $3 இழப்பீடு வழங்கப்படும்.
பயணிகளை ஏற்றிச் செல்லவேண்டிய இடத்தை நோக்கி ஓட்டுநர்கள் குறைந்தபட்சம் மூன்று நிமிடங்கள் பயணம் செய்திருக்கும் நிலையில் பயணம் ரத்து செய்யப்பட்டால் இழப்பீடு வழங்கப்படும்.
பயணிகள் இருக்கும் இடத்திலிருந்து 500 மீட்டர் தொலைவில் இருக்கும்போது பயணம் ரத்தானாலும் இழப்பீடு வழங்கப்படும் என்று தேசிய தனியார் வாடகைக் கார் சங்கம் ஃபேஸ்புக்கில் பதிவிட்டது.
தடா நிர்வாகத்துடன் தொடர்ந்து நடத்தப்பட்ட கலந்துரையாடல்களுக்குப் பிறகு இழப்பீடு வழங்கும் கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டதாகச் சங்கம் குறிப்பிட்டது.
அந்தக் கொள்கை மாற்றம், பயணிகள் இருக்கும் இடம் வரை செல்லும் ஓட்டுநர்களின் சேவையை அங்கீகரிக்கும் வகையில் உள்ளது என்று சங்கம் சுட்டியது.
புதிய நடைமுறை இம்மாதம் 18ஆம் தேதியிலிருந்து நடப்புக்கு வரும்.
பயணச் சேவையைப் பயணிகள் ரத்து செய்தாலோ பயணிகளை ஏற்றிச் செல்லவேண்டிய இடத்துக்கு ஓட்டுநர்கள் சென்ற பிறகும் பயணிகள் வரவில்லை என்றாலோ $3 இழப்பீட்டைத் தடா ஓட்டுநர்கள் பெறுவர்.
தடா நிறுவனம் வாகனங்களைச் சுத்தப்படுத்துவதற்கு வழங்கும் மானிய உச்சவரம்பையும் $150க்கு உயர்த்துகிறது. தற்போது ஓட்டுநர்கள் $70 வரை பெறுகிறார்கள்.

