$4.66 மி. மோசடி; 268 பேரிடம் விசாரணை: இருவாரத் தேடலில் 91 பெண்களும் சிக்கினர்

1 mins read
0a7575f4-7c28-40c1-86e2-78f574dcdf78
அதிகாரிகளிடம் பிடிபட்ட அனைவரும் 15 வயதுக்கும் 78 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்று காவல்துறை கூறியுள்ளது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் $4.66 மில்லியனுக்கும் அதிகமான பண இழப்புகளை ஏற்படுத்திய மோசடிச் சம்பவங்களின் தொடர்பில் 268 சந்தேக நபர்கள் பிடிபட்டுள்ளனர்.

மோசடி செய்தவர்கள், மோசடிக்குத் துணைபோனவர்கள் என்ற கோணத்தில் அவர்களிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

காவல்துறையும் வர்த்தக விவகாரத் துறையும் இணைந்து இரு வாரங்களாக நடத்திய தேடுதல் வேட்டையில் அவர்கள் சிக்கினர். நவம்பர் 21ஆம் தேதி தொடங்கிய தேடுதல் நடவடிக்கை டிசம்பர் 4 வரை நீடித்தது.

இது தொடர்பாக வியாழக்கிழமை (டிசம்பர் 4) காவல்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அதிகாரிகளிடம் சிக்கிய 268 பேரில் 91 பேர் பெண்கள் என்றும் பிடிபட்ட அனைவரும் 15 வயதுக்கும் 78 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

விசாரிக்கப்படும் அனைவரும் சிங்கப்பூரில் நடைபெற்ற 800க்கும் மேற்பட்ட மோசடிகளில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

குறிப்பாக, இணைய வர்த்தக மோசடி, நண்பரைப்போல ஆள்மாறாட்டம் செய்து மோசடி, வேலை மோசடி, அரசாங்க அதிகாரிபோல ஆற்மாறாட்டம் செய்து மோசடி, முதலீட்டு மோசடி, வாடகை மோசடி ஆகியவற்றில் அவர்கள் ஈடுபட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

மோசடி, சட்டவிரோதப் பணமாற்றம், உரிமமின்றி தொகை அனுப்புதல் ஆகிய குற்றச் செயல்களில் இருக்கும் தொடர்பு குறித்து அவர்களிடம் விசாரிக்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்