மோசடிகளில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் 19 வயதுக்கும் 34 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
அத்துடன், மேலும் 13 பேர் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகக் காவல்துறை, வெள்ளிக்கிழமை (டிசம்பர் 26) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது. அந்த 13 பேரும், 17 வயதுக்கும் 60 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 10க்கும் 24க்கும் இடைப்பட்ட காலக்கட்டத்தில் காவல்துறையின் மத்திய விசாரணைப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் நடத்திய அந்த விசாரணையில் சந்தேக நபர்கள் அகப்பட்டனர்.
45க்கும் அதிகமான மோசடிச் சம்பவங்களில் அந்தச் சந்தேக நபர்கள் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது.
இணைய விற்பனைத்தள மோசடி, நண்பர்களையோ அரசாங்க அதிகாரிகளையோ ஆள்மாறாட்டம் செய்யும் மோசடிகள், வேலை மோசடிகள் போன்றவைகளால் பாதிக்கப்பட்டவர்கள் 406,000 வெள்ளிக்கு மேல் இழந்ததாகக் கூறப்படுகிறது.
ஏமாற்றுவது, வங்கியின் இணையக் கட்டமைப்புக்குள் அத்துமீறி ஊடுருவதற்கு அறிமுகமில்லாத நபர்களுக்கு உடந்தையாக இருப்பது, கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றுவது ஆகிய குற்றங்களின் தொடர்பில் அவர்கள் தற்போது விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
ஏமாற்றும் குற்றத்திற்காக மூன்று ஆண்டு சிறைத்தண்டனையோ அபராதமோ விதிக்கப்படலாம். அதிகாரமின்றிக் கணினிப் பொருள்களுக்குள் ஊடுருவ வகைசெய்யும் முதல் குற்றத்திற்காக ஈராண்டு சிறைத்தண்டனையோ அபராதமோ விதிக்கப்படலாம்.
குற்றச் செயல்மூலம் பெறப்படும் லாபத்தை வைத்திருக்க பிறர்க்கு உதவியோர்க்கு மூன்றாண்டு வரையிலான சிறைத்தண்டனையோ அபராதமோ விதிக்கப்படலாம்.
தொடர்புடைய செய்திகள்
மோசடிக்கு உடந்தையாக இருப்போரின் செயல்பாடுகளை முடக்க முற்படும் புதிய நடவடிக்கைகளைச் சிங்கப்பூர்க் காவல்துறை, சிங்கப்பூர் நாணய ஆணையம், தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம், ‘கவ்டெக்’ அமைப்பு ஆகியவை இணைந்து செப்டம்பர் 17ல் அறிவித்தன.
சிங்பாஸ், கார்ப்பாஸ் ஆகியவற்றின் தவறான பயன்பாட்டைத் தடுப்பதும் புதிய நடவடிக்கைகளின் நோக்கமாகும்.
தெரியாத நபர்களிடம் கண்மூடித்தனமாகப் பணமாற்றம் செய்யவோ விலைமதிப்புள்ள பொருள்களை ஒப்படைக்கவோ வேண்டாம் என்பதையும் காவல்துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

