சிறப்புத் தேவையுள்ள 200 மாணவர்களுக்கு $600,000 நிதியுதவி: அமைச்சர் டெஸ்மண்ட் லீ

சிறப்புத் தேவையுள்ள 200 மாணவர்களுக்கு $600,000 நிதியுதவி: அமைச்சர் டெஸ்மண்ட் லீ

கல்விப் பருவத்தைக் கடந்து தன்னம்பிக்கையுடன் வாழ்வில் வேலை வாய்ப்புகளைத் தடையின்றி பெற இந்த நிதி மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும்
ஷின்மின் ஊடகம்

25 Mar 2026 - 10:05 pm

2 mins read

உயர் கல்வி மேம்பாட்டுக்கும், நல்ல வேலை வாய்ப்புகளுக்கும் சிறப்புத் தேவையுடைய 200 மாணவர்களுக்கு உதவிட சிங்கப்பூர் நிர்வாகக் கல்விக் கழக மக்கள் மேம்பாட்டு நிதி (SIMPDF) ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.

அந்த நிதியில் இருந்து $600,000, அஸம்ப்ஷன் பாத்வே பள்ளி, நார்த்லைட் பள்ளி, கிரெஸ்ட் உயர்நிலைப் பள்ளி, ஸ்பெக்ட்ரா உயர்நிலைப் பள்ளி ஆகிய கல்வி நிலையங்களின் மாணவர்கள் பெறுவர். முன்னேற்ற விருதுகள், பயிற்சி விருதுகள் எனப்படும் இரண்டு விருதுகளின் அடிப்படையில் அந்த நிதி உதவி வழங்கப்படவுள்ளது.

சிறப்பு நிதி உதவிகள் குறித்த விவரங்களைக் கிளமெண்டியில் உள்ள சிங்கப்பூர் நிர்வாகக் கல்விக் கழக வளாகத்தில் புதன்கிழமை (மார்ச் 25) நடந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வில் கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ கலந்துகொண்டு அறிவித்தார்.

மேலும் இவ்வாண்டு முதல் 2028ஆம் ஆண்டுக்குள்ளாக குறிப்பிடப்பட்டுள்ள நான்கு பள்ளிகளுக்கும் தனித்தனியே ஆண்டுக்கு $50,000 வழங்கப்படும்.

முன்னேற்ற விருதுகள் (Progression Awards), பின்தங்கிய சூழலில் இருந்து தேர்ச்சிபெற்றுவரும் மாணவர்களுக்கு உயர்கல்வி, தொழிற்பயிற்சி ஆகியவற்றில் தொடர்ந்து கல்வி பயில வழங்கப்படும்.

பயிற்சி விருதுகள் (Apprenticeship Awards) எதிர்காலத்தில் நல்ல வேலைகளில் அமர்வதற்கான முன் அனுபவங்களைப் பெற பயிற்சிபெறும் மாணவர்களுக்கு வழங்கப்படும் விருதுகளாகும்.

சிறப்புத் தேவையுடைய மாணவர்கள் பயிலும் இந்தப் பள்ளிகளில் 50 முதல் 60 விழுக்காட்டினர் சிறப்புக் கல்வித் தேவை உள்ளவர்கள் ஆவர்.

கல்விப் பருவத்தை முடித்து தன்னம்பிக்கையுடன் வாழ்வில் அடியெடித்து வைக்கவும் வேலை வாய்ப்புகளைத் தடையின்றி பெறவும் இந்த நிதி அம்மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் என்று சிங்கப்பூர் நிர்வாகக் கல்விக் கழக மக்கள் மேம்பாட்டு நிதியின் தலைவர் பேட்ரிக் டே கருத்துரைத்தார்.

குறிப்புச் சொற்கள்
கல்விநிதிஉதவிபுரிந்துணர்வுதிட்டம்கல்வி அமைச்சு