இவ்வாண்டின் தொடக்கப்பள்ளி இறுதித் தேர்வு (பிஎஸ்எல்இ) முடிவுகள் நவம்பர் 24ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியாகும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலேயே முடிவுகளைப் பெற்றுக்கொள்வதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று கல்வி அமைச்சும் சிங்கப்பூர்த் தேர்வு, மதிப்பீட்டுக் கழகமும் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 17) ஒரு கூட்டறிக்கைமூலம் தெரிவித்தன.
தேர்வு முடிவுகளைப் பெற்றுக்கொள்வது குறித்த முழு விவரங்களைப் பள்ளிகள் மாணவர்களுக்கு வழங்கும். நவம்பர் 24ஆம் தேதி பள்ளிக்கு நேரில் சென்று தேர்வு முடிவுகளைப் பெற்றுக்கொள்ள இயலாதவர்கள், தங்களுக்குப் பதிலாக மாற்றாள் ஒருவரை நியமித்து நவம்பர் 26ஆம் தேதிக்குள் முடிவுகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் உயர்நிலை ஒன்றுக்கான பள்ளித் தெரிவுகளையும் விருப்பங்களையும் நவம்பர் 24ஆம் தேதி காலை 11.30 மணி முதல் நவம்பர் 30ஆம் தேதி மாலை 4.30 மணி வரை இணையம் வழியாகச் சமர்ப்பிக்கலாம்.
கல்வி அமைச்சின் உயர்நிலை ஒன்று இணையத்தளத்தில் உள்ள இணையவாசல் மூலமாக அதனைச் சமர்ப்பிக்கலாம். பெற்றோரில் ஒருவர் மட்டும் உள்நுழைந்து பதிவைச் சமர்ப்பித்தால் போதுமானது. அந்த இணையவாசலில் உள்நுழைவதற்குச் செல்லுபடியாகும் ‘சிங்பாஸ்’ கணக்கை அவர்கள் வைத்திருப்பது அவசியம்.
இணையவழிச் சமர்ப்பிப்பில் உதவி தேவைப்படுவோர் நவம்பர் 30ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு முன்னதாகத் தங்கள் பிள்ளையின் தொடக்கப்பள்ளியைத் தொடர்புகொண்டு தேவையான உதவியைப் பெறலாம்.
உயர்நிலை ஒன்று பள்ளி ஒதுக்கீட்டு முடிவுகள் டிசம்பர் 18ஆம் தேதி வெளியிடப்படும் என இப்போதைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. உறுதிப்படுத்தப்பட்ட தேதி குறித்த தகவல் பின்னர் அறிவிக்கப்படும் என்று அந்தக் கூட்டறிக்கை குறிப்பிட்டது.
உயர்நிலைப் பள்ளி ஒதுக்கீட்டு முடிவுகளை இணையம் வழியாகவும் உள்ளூர்த் தொலைபேசி எண் வழங்கப்பட்டிருந்தால் குறுஞ்செய்தி வழியாகவும் மாணவரின் தொடக்கப்பள்ளி வாயிலாகவும் அறிந்துகொள்ளலாம்.
