சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் சார்பில் புக்கிட் கோம்பாக் தனித்தொகுதியில் திரு ஹரிஷ் பிள்ளை போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் டான் செங் போக் அறிவித்துள்ளார்.
சனிக்கிழமை (ஏப்ரல் 19) காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இவ்விவரம் வெளியானது. தொழில்நுட்பத் துறையில் நீண்டகால அனுபவம் வாய்ந்த திரு ஹரிஷ், 65, புக்கிட் கோம்பாக் தனித்தொகுதியில் மக்கள் செயல் கட்சியின் லோ யென் லிங்கை எதிர்த்துப் போட்டியிடவுள்ளார்.
2020 பொதுத் தேர்தலில் தஞ்சோங் பகார் குழுத்தொகுதியில் திரு ஹரிஷ் களமிறங்கியிருந்தார்.
மின்னிலக்க, தொழில்நுட்ப இடைவெளியைக் களைவது தம் இலக்கு என்று கூறிய அவர், தமக்கு வாய்ப்பளிக்கப்பட்டால் நகர மன்றத்தில் தொழில்நுட்ப மலர்ச்சியை ஏற்படுத்த நாட்டம் கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திரு ஹரிஷ், ‘‘நான் தேர்ந்தெடுக்கப்பட்டால், நகர மன்ற நிர்வாக அமைப்பும் சேவைகளும் முதல் நாளிலிருந்தே முழுமையாகச் செயல்படுவதை உறுதி செய்வேன்,’‘ என்று கூறினார்.
நகர மன்றச் சேவைகளில் தொடர்ச்சியைப் பேணுவதற்கும் குடியிருப்பாளர்களுக்கு இடையூறு ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கும் இது மிகவும் முக்கியம் என்றார் அவர்.

