எதிர்வரும் பொதுத் தேர்தலில் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் (பிஎஸ்பி) சார்பில் சுவா சூ காங் குழுத்தொகுதியில் களமிறங்கவுள்ள நால்வர் அடங்கிய அணியை அறிமுகம் செய்தார் அக்கட்சியின் தலைவர் டான் செங் போக்.
சனிக்கிழமை (ஏப்ரல் 19) காலை தெக் வாய் ஸ்குவேரில் அக்கட்சியின் வேட்பாளர் அணி அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.
அதன்படி, சிங்கப்பூர் உற்பத்தித்துறை சம்மேளனத்தின் முன்னாள் தலைமைச் செயலாளர் லாரன்ஸ் பெக் எங் லியோங் 55, கட்சியின் இரண்டாம் துணைத் தலைவர் அபாஸ் கஸ்மானி 71, கட்சியின் மகளிர் பிரிவுத் தலைமை திருவாட்டி வெண்டி லோ, 48, கட்சியின் பொருளாளர் சி.நல்லகருப்பன் 60, ஆகியோர் வேட்பாளர்களாக அறிமுகம் கண்டனர்.
சூவா சூ காங் வட்டாரத்தை மேம்படுத்த அனைத்துத் தலைமுறையினருக்குமான திட்டம் இருப்பதாக கூறிய வேட்பாளர்கள், தங்கள் கட்சிக்கு வாய்ப்பளிக்கப்பட்டால், மக்களுக்காக செய்யவிருக்கும் திட்டங்கள் குறித்தும் பேசினர்.
அதன்படி, வேலைவாய்ப்பில் சிங்கப்பூரர்களுக்கு முன்னுரிமை, அடிப்படைப் பொருள்களுக்கு பொருள், சேவை வரி விலக்கு, 24 மணி நேர மருந்தகம், தனியாக வசிக்கும் முதியோருக்காக செயற்கை நுண்ணறிவு கொண்ட சிறப்புத் தொலைபேசி இணைப்புகள், சிறு நியாய விலைக் கடைகள் உள்ளிட்ட பற்பல திட்டங்களைப் வாக்காளர்களுக்காக பட்டியலிட்டனர் கட்சியினர்.
துணைப் பிரதமர் கான் கிம் யோங் தலைமையிலான மக்கள் செயல் கட்சி அணியை எதிர்த்து இத்தொகுதியில் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி அணி களமிறங்கவுள்ளது.
இந்த அணியின் புதுமுகமான திரு லாரன்ஸ் பெக், அரசியலுக்கு புதுவரவாவார்.
இதற்கிடையே, தேர்தலில் போட்டியிடுவது குறித்து தமிழ் முரசிடம் பேசிய திரு நல்லகருப்பன், 2020 பொதுத் தேர்தலில் நீ சூன் குழுத்தொகுதியில் களமிறங்கியவர் என்பது நினைவுகூரத்தக்கது. அவர் இரண்டாவது முறையாக பொதுத் தேர்தலில் போட்டியிடுகிறார்.
தொடர்புடைய செய்திகள்
இந்த அரசியல் யுத்தம் ‘டேவிட் மற்றும் கோலியாத்துக்கு‘ இடையிலான சண்டை என்று வருணித்த திரு நல்லகருப்பன், “துணைப் பிரதமரின் அணிக்கு எதிராக நாங்கள் போட்டியிடுகிறோம் என்பது எங்களுக்குத் தெரியும். முக்கிய வேறுபாடு என்னவென்றால், எங்களுக்கு இதயமும் ஆன்மாவும் இருக்கிறது,” என்றார்.

