வசதிகுறைந்த மாணவர்களுக்கு உதவ ஃபேர்பிரைஸ் குழுமம் மேற்கொள்ளும் முயற்சியின் ஒரு பகுதியாக, பயன்படுத்தப்பட்ட பாடப்புத்தகங்களை வைத்திருப்பவர்கள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் ‘ஃபேர்பிரைஸ் எக்ஸ்ட்ரா’ (FairPrice Xtra) பேரங்காடிகளில் அவற்றை நன்கொடையாக வழங்கலாம்.
நவம்பர் 14ஆம் தேதிமுதல் 28ஆம் தேதிவரை, கல்வி அமைச்சின் ஒப்புதல் பெற்ற பழைய பாடப்புத்தகங்களைத் தீவு முழுவதும் உள்ள அனைத்து எட்டு ஃபேர்பிரைஸ் எக்ஸ்ட்ரா பேரங்காடிகளிலும், ஈசூனில் உள்ள ‘சு சி மனிதநேய இளையோர் நிலையத்திலும்’(Tzu Chi Humanistic Youth Centre) நன்கொடையாக வழங்கலாம்.
தற்போது 44வது ஆண்டாக நடைபெறும் இந்த ‘ஷேர்-எ-டெக்ஸ்ட்புக்’ (Share-A-Textbook) நன்கொடை இயக்கம், புதிய பள்ளி ஆண்டுக்கான அத்தியாவசிய கல்விப் பொருள்களை வசதிகுறைந்த மாணவர்களுக்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று ஃபேர்பிரைஸ் குழுமம் வியாழக்கிழமை (நவம்பர் 12) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இவ்வாண்டுக்கான இந்த இயக்கம் தேசியத் தொழிற்சங்கக் காங்கிரசுடன் இணைந்து நடத்தப்படுகிறது.
நவம்பர் 28ஆம் தேதிமுதல் டிசம்பர் 3ஆம் தேதிவரை, ஃபேர்பிரைஸ் குழுமம், தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ், பங்காளித்துவப் பள்ளிகள், அமைப்புகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து 1,000க்கும் மேற்பட்ட தொண்டூழியர்கள் ஒன்றிணைந்து பாடப்புத்தகங்களை வகைப்படுத்தவுள்ளனர்.
அவர்களில், பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்த முயற்சியில் பங்களித்துவரும் நீண்டகாலத் தொண்டூழியர்கள், மாணவர்கள், பெற்றோர் உள்ளிட்டோர் அடங்குவர் என்று ஃபேர்பிரைஸ் குழுமம் தெரிவித்தது.
டிசம்பர் 4, 5ஆம் தேதிகளில் காலை 9 மணிமுதல் இரவு 7 மணிவரை, ஈசூனில் உள்ள ‘சு சி மனிதநேய இளையோர் நிலையத்தில்’ இருந்து பொதுமக்கள் அந்தப் பழைய பாடப்புத்தகங்களைப் பெற்றுக்கொள்ளலாம். நிலையத்திற்குள் நுழைவதற்கான இறுதி நேரம் மாலை 6 மணியாகும்.
வசதிகுறைந்த மாணவர்கள், குடும்பங்களின் கல்வித் தேவைகளுக்கு ஆதரவளிப்பதற்காக 1982ஆம் ஆண்டில் ‘ஷேர்-எ-டெக்ஸ்ட்புக்’ திட்டம் தொடங்கப்பட்டது.
இதுவரை, அந்த இயக்கத்தின் மூலம் கிட்டத்தட்ட 300,000 மாணவர்களுக்கு ஏழு மில்லியனுக்கும் அதிகமான பாடப்புத்தகங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.
