மரபணுத் தகவல்களை மேலும் நன்கு பாதுகாக்க பொதுமக்களிடம் ஆலோசனை

மரபணுத் தகவல்களை மேலும் நன்கு பாதுகாக்க பொதுமக்களிடம் ஆலோசனை

2 mins read
7b114d50-c527-40e8-aa23-673bc6f180be
மரபணுத் தகவல் பாதுகாப்பு குறித்து பொதுமக்கள் தங்களின் கருத்துகளைத் தெரிவிக்கலாம். - படம்: பேலோ வெர்டே புற்றுநோய் வல்லுநர்கள்
Google News Preferred Icon

குறிப்பிட்ட சில நோய்களுக்கு ஒருவர் ஆளாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதா என்பதை அடையாளம் காண மரபணுச் சோதனை பயன்படுத்தப்படலாம்.

அதன் மூலம் அந்த நோய்களுக்கு ஆளாகும் வாய்ப்புகளைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளைத் தனிநபர்கள் எடுக்கலாம். மரபணுச் சோதனைகளின்வழி கூடுதலானோரைப் பலனடையச் செய்யும் நோக்கில் தேசிய அளவில் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுவருகின்றன.

எடுத்துக்காட்டாக, குடும்பத்தாரிடையே காணப்படக்கூடிய ‘ஹைப்பர்கொலஸ்டரொலீமியா’ எனப்படும் அளவுக்கதிகமான கொழுப்புச்சத்துப் பிரச்சினைக்கான தேசிய மரபணுச் சோதனைத் திட்டம் சென்ற ஆண்டு தொடங்கப்பட்டது. இப்பிரச்சினையால் உடலுக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய வகையில் பிறப்பிலிருந்தே எல்டிஎல் வகை கொழுப்புச்சத்து அளவுக்கதிகமாக இருக்கலாம்.

மேலும், இவ்வாண்டு டிசம்பர் மாதம் முதல் மரபணுச் சோதனைகளுக்கும் குடும்பப் பின்னணி காரணமாக மார்பக, கருப்பைப் புற்றுநோய்களுக்கு ஆளாகமல் பார்த்துக்கொள்ளும் தலையீட்டு நடவடிக்கைகளுக்கும் சுகாதார அமைச்சு சலுகை வழங்கும்.

நன்மைகள் இருந்தும் தயக்கம்

எனினும், நன்மைகள் இருந்தாலும் சிலர் மரபணுச் சோதனைகளை மேற்கொள்ளத் தயங்க்கூடும். அச்சோதைனைகளின் முடிவுகள் சுகாதாரப் பராமரிப்புத் துறையைத் தாண்டி எவ்வாறு பயன்படுத்தப்படும் என்ற கவலை அதற்குக் காரணமாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காப்புறுதித் திட்டங்கள், வேலை தொடர்பான முடிவுகள் போன்றவற்றில் தகவல்கள் எவ்வாறு பயன்படுத்தப்படக்கூடும் ஆகிய கவலைகள் அவற்றில் அடங்கும் என்று சுகாதார அமைச்சு வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 7) தெரிவித்தது.

“மரபணுச் சோதனைகளை விரிவுபடுத்தி அதன் நன்மைகளை முழுமையாகப் பெற, தங்களின் மரபணுத் தகவல்கள் சரியாகப் பாதுகாக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன என்ற நம்பிக்கை தனிநபர்களிடம் இருப்பது முக்கியம்,” என்று அமைச்சு குறிப்பிட்டது.

இதுகுறித்த சட்ட மசோதா நடப்புக்கு வந்தால் அது, மரபணுத் தகவல் பாதுகாப்பை வலுப்படுத்தும். அதன்படி காப்புறுதி நிறுவனங்கள் போன்றவை திட்டங்கள் தொடர்பாக முடிவெடுக்க மரபணுச் சோதனையை மேற்கொள்ளுமாறு நிபந்தனை விதிக்க முடியாது. நிறுவனங்கள் ஊழியர்களை வேலைக்கு எடுக்கும்போதும் இது பொருந்தும்.

பொதுமக்களின் கருத்து

இந்த விவகாரத்தின் தொடர்பில் சுகாதாரப் பராமரிப்பு நிபுணர்கள், காப்புறுதி நிறுவனங்கள் உள்ளிட்ட தரப்பினரிடம் ஆலோசனை கேட்கப்பட்டுவருகிறது.

கருத்து கேட்டு பொதுமக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை முதல் வரும் செப்டம்பர் மாதம் நான்காம் தேதி வரை பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்.

சட்ட மசோதா குறித்த தகவல்களை https://go.gov.sg/genetic-information-bill-consult-paper என்ற இணைய முகவரியில் தெரிந்துகொள்ளலாம். பொதுமக்கள் தங்களின் கருத்துகளை https://go.gov.sg/genetic-information-bill-consultation என்ற இணைய முகவரிவழி தெரிவிக்கலாம்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்மரபணுமருத்துவம்சுகாதாரம்கருத்து