சுகாதாரத் துறை இணைய ஊடுருவல் நோயாளிகள் பராமரிப்பைப் பாதிக்கவில்லை: அமைச்சு

சுகாதாரத் துறை இணைய ஊடுருவல் நோயாளிகள் பராமரிப்பைப் பாதிக்கவில்லை: அமைச்சு

படம் ராய்ட்டர்ஸ்

12 Nov 2026 - 9:41 pm

2 mins read

சுகாதாரத் துறையில் அண்மையில் ஏற்பட்ட இணைய ஊடுருவல்களால் நோயாளிகள் பராமரிப்புச் சேவை, பாதுகாப்பு, பராமரிப்பு எதுவும் பாதிக்கப்படவில்லை என்று சுகாதார அமைச்சு வியாழக்கிழமை (நவம்பர் 12) உறுதிப்படுத்தியுள்ளது.

நோயாளிகளின் மருத்துவப் பதிவுகள் எதுவும் கசியவில்லை என்றும் அது குறிப்பிட்டது.

சுகாதார அமைச்சின்கீழ் இயங்கும் ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பின் (ஏஐசி)) கணினிக் கட்டமைப்பில் நவம்பர் 10ஆம் தேதி இணைய ஊடுருவல் நடந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனால், பொதுச் சுகாதாரம் சமூகப் பராமரிப்பு நிறுவனங்களைச் சேர்ந்த 4,064 ஊழியர்களின் பெயர், தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, அடையாள எண் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்கள் கசிந்திருக்கக்கூடும் என அமைச்சு வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது. அவர்களில் பொதுச்சுகாதாரக் கழகங்களிலும் சமூகப் பராமரிப்பு நிலையங்களிலும் பணியாற்றுவோரும் அடங்குவர்.

முதியோர் பராமரிப்புச் சேவைகளை ஒருங்கிணைக்கும் அவ்வமைப்பு, நோயாளிகளின் தரவுகளோ அல்லது பிற கட்டமைப்புகளோ பாதிக்கப்படவில்லை என்று அது குறிப்பிட்டது.

அண்மைய வாரங்களில் சுகாதாரத்துறை சார்ந்த அமைப்புகளில் நடந்துவரும் தரவு ஊடுருவல்களில் இதுவும் ஒன்றாகிறது.

ஏஐசி அமைப்பு, அதே நாளில் வெளியிட்ட அறிக்கையில் மேம்பட்ட பராமரிப்புத் திட்டம் (ஏசிபி) செயல்படும் தளத்தில் அதன் தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்பு அடையாளம் தெரியாத மூன்றாம் தரப்பினரால் ஊடுருவப்பட்டதை உறுதிப்படுத்தியது.

இதுவரை நோயாளிகளின் தரவுகள் பாதிக்கப்பட்டதற்கான அறிகுறிகள் இல்லை என்பதை ஏஐசி உறுதிப்படுத்தியது. மேலும் இதர கணினிக் கட்டமைப்புகள் ஊடுருவப்படவில்லை எனவும் விசாரணைகள் தொடர்ந்து நடப்பதாகவும் அது தெரிவித்தது.

காவல்துறை, சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு முகமை ஆகியவற்றிடம் புகார் அளிக்கப்பட்டதாக ஏஐசி கூறியது.

விசாரணைகளுக்கு ஏதுவாக அன்றையதினமே ஏசிபி முகமையின் தகவல்தொழில்நுட்பக் கட்டமைப்பு இணையத்திலிருந்து அகற்றப்பட்டு பிறகு வியாழக்கிழமை மீண்டும் செயல்படத்தொடங்கியது.

பொதுமக்கள் அவர்களது மேம்பட்ட பராமரிப்புத் திட்டங்களை பதிவு செய்துகொள்ள முகமையின் தகவல்தொழில்நுட்பக் கட்டமைப்பு உதவுகிறது. அத்தகவல்களை நோயாளிகளின் பராமரிப்பாளர்கள் பதிவு செய்கின்றனர்.

நோயாளிகளுடன் ஆலோசனை நடத்தி எதிர்கால பராமரிப்புக்கான விருப்பங்களை முடிவுசெய்ய உதவும் வழிகாட்டிகளான அந்தப் பராமரிப்பாளர்கள் அச்சேவைக்கென சான்றிதழ்கள் பெற்றவர்கள்.

குறிப்புச் சொற்கள்