தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தனிநபர் நம்பிக்கையை விட பொதுமக்கள் நலனுக்கு முன்னுரிமை

2 mins read
மரண தண்டனை குறித்து அமைச்சர் சண்முகம்
88123437-009b-4663-b59f-0341909e561b
மரண தண்டனையை நீக்குவது மேலும் அதிகமானோரை சிங்கப்பூருக்குள் போதைப் பொருள் கடத்திவர ஊக்குவிக்கும் என்றார் அமைச்சர் கா சண்முகம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஒருவரின் தனிப்பட்ட நம்பிக்கைகளைவிட பொதுமக்கள் நலனுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று மரண தண்டனை குறித்து உள்துறை, சட்ட அமைச்சர் சண்முகம் கூறியுள்ளார்.

இதை அவர் தமது ஃபேஸ்புக் பதிவில் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 19) தெரிவித்தார்.

“ஒருவரின் தனிப்பட்ட நம்பிக்கைகள் கொள்கை முடிவு அவர் கொண்டிருக்கும் சிந்தனையை எடுத்துக்காட்டுகிறது. ஆனால், இறுதியில், நமது தனிப்பட்ட நம்பிக்கைகளை ஒருபுறம் வைத்துவிட்டு, சமுதாயத்துக்கு எது நல்லதோ அதைத்தான் நாம் செய்ய வேண்டும். அதற்கு மாறாக செயல்படுவது தவறானது,” என்று அவர் விளக்கினார்.

அவரது இந்த ஃபேஸ்புக் பதிவு சிங்கப்பூரில் மரண தண்டனை விதிக்கப்படுவது குறித்து அரசு கருத்தில் கொள்ளும் அம்சங்களை தெளிவுபடுத்தியது.

“மரண தண்டனையை நீக்குவது பல போதைப்பொருள் கடத்தல்காரர்களின் உயிரைக் காப்பாற்றும். ஆனால், அவ்வாறு செய்தால், அது மேலும் பலரை போதைப்பொருளை சிங்கப்பூருக்குள் கடத்திவர ஊக்குவிக்கும்,” என்று அவர் தெரிவித்தார்.

“போதைப்பொருள் விநியோகம் சந்தேகமே இல்லாமல் அதிகரிக்கும். அதனால், அதிகரிக்கும் கடுங் குற்றங்கள், வன்முறை, போதைப்பொருள் தொடர்பான மரணங்கள் என பல விளைவுகள் ஏற்படும்.

“இதனால், சிங்கப்பூரில் அப்பாவி சிறுவர்கள் முதல் மேலும் பல அப்பாவி மக்கள் மரணமடைவர்,” என்றார் திரு சண்முகம்.

பிரிட்டனின் பிபிசி தொலைக்காட்சி நேர்காணலில் தான் 2024ஆம் ஆண்டு பங்கேற்றதைக் குறிப்பிட்ட திரு சண்முகம், அதில் தான் “பொதுக் கொள்கைகள் வகுக்கும்போது, கனிவான இதயம் வேண்டும் என்றபோதும் திடமான சிந்தனை தேவை,” என்று கூறியிருந்ததை நினைவுகூர்ந்தார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தமது மனசாட்சிக்கு விரோதமானது எனக் கூறி, பதவியின் கடைசி நாளான ஜனவரி 20ஆம் தேதிக்கு முன் 37 கைதிகளின் மரண தண்டனையை நீக்கியதை சுட்டி திரு சண்முகம் மரண தண்டனை குறித்து கருத்துரைத்தார். அத்துடன், இது தொடர்பில் வால் ஸ்திரீட் ஜர்னல் செய்தித்தாள் குறிப்பிட்டது போல் மேலும் பல மரண தண்டனைக் கைதிகள் இருக்கும் நிலையில் இந்த 37 பேரின் மரண தண்டனைகளை மட்டும் நீக்கியது சரியா என அந்த செய்தித்தாள் கூறியதை அமைச்சர் சுட்டினார்.

மரண தண்டனை குறித்த தமது நிலைப்பாடு என்னவென்று பலமுறை தம்மிடம் கேட்கப்படுவதாகவும் அது குறித்த தமது சிந்தனையை அவர் தெளிவுபடுத்தினார். சிங்கப்பூரின் பொது நலன் ஒன்றே தமது தலையாய சிந்தனை என்று தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்