சிங்கப்பூர் மலாய் நாளிதழான பெரித்தா ஹரியான் ஒவ்வோர் ஆண்டும் பல்வேறு துறைகளில் சமூகத்திற்கு உதவும், முனைப்பூட்டும் மலாய்/முஸ்லிம் நபர்களுக்கும் அமைப்புகளுக்கும் அதன் சாதனையாளர் விருதுகளை வழங்கி வருகிறது.
இவ்வாண்டு மேபேங்க் வங்கியுடன் இணைந்து நடத்தப்படும் விருது நிகழ்ச்சியில் விடாமுயற்சியையும் சமூக முன்னேற்றத்தையும் அங்கீகரிக்க ‘பெரித்தா ஹரியான்-மேபேங்க் பெர்காசா’ என்ற விருது அறிமுகம் காண்கிறது.
இவ்விருதையும் சேர்த்து மொத்தம் மூன்று விருதுகளுக்குப் பொதுமக்கள் தங்கள் பரிந்துரைகளை அனுப்பலாம்.
‘பெரித்தா ஹரியான்-மேபேங்க் பெர்காசா’ விருதுவழி சமூக, பொருளியல் தடைகளைக் கடந்து கல்வி, வேலை, தொழில் என ஏதேனும் ஓர் அம்சத்தில் சிறந்து விளங்கிய சிங்கப்பூரர்கள் இருவர் அங்கீகரிக்கப்படுவர் என்று பெரித்தா ஹரியான் குறிப்பிட்டது.
சாதனைகள், தலைமைத்துவம், சமூகப் பங்களிப்பு போன்ற அம்சங்களில் சிறந்து விளங்கும், மலாய்/முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்குப் பெரித்தா ஹரியான் சாதனையாளர் விருது வழங்கப்படும்.
பெரித்தா ஹரியான் இளம் சாதனையாளர் விருதைக் குறிப்பிடத்தக்க திறமை, வேட்கை, வெற்றி ஆகியவற்றை வெளிப்படுத்தும் 30 வயதிற்கும் குறைவானோர் பெறுவர்.
மலாய்/முஸ்லிம் சமூக, தனியார் நிறுவனத் தலைவர்கள் கொண்ட நடுவர் குழு ஒன்று பொதுப் பரிந்துரைகளிலிருந்து வெற்றியாளர்களைத் தீர்மானிக்கும்.
பொதுமக்கள் தங்கள் பரிந்துரைகளை https://register.sph.com.sg/?campaigns=bhaoy26 என்ற இணைப்புவழி பதிவிடலாம்.
பரிந்துரைகளை அனுப்புவதற்கான இறுதி நாள் ஆகஸ்ட் 18.


