தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பொதுத்துறை ஆய்வறிக்கை: முக்கியத் துறைகளில் சிங்கப்பூர் முன்னேற்றம்

3 mins read
3c476987-0246-4f4f-954f-64b458f64756
சுகாதாரத் துறையை எடுத்துக்கொண்டால், உலக அளவில் நீண்ட ஆயுட்காலம் கொண்ட மக்களை உடைய நாடுகளில் ஒன்றாகத் தொடர்ந்து விளங்குகிறது சிங்கப்பூர். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அனைத்து வயதுப் பிரிவுகளையும் சேர்ந்த குடிமக்களுக்குக் கூடுதல் வாய்ப்புகளை உருவாக்கும் இடமாகச் சிங்கப்பூர் விளங்குகிறது.

மேலும், தரமான, நீடித்த நிலைத்தன்மையுடன் கூடிய வாழ்க்கைத் தரம், வலுவான, மீள்திறன்மிக்க பொருளியல் போன்றவற்றை உடைய நாடாகவும் சிங்கப்பூர் திகழ்கிறது.

நிதியமைச்சு வெள்ளிக்கிழமை (நவம்பர் 1) வெளியிட்ட சிங்கப்பூர்ப் பொதுத்துறை முடிவுகள் மறுஆய்வு 2024 எனும் அறிக்கை அவ்வாறு குறிப்பிடுகிறது.

ஈராண்டுகளுக்கு ஒருமுறை வெளியிடப்படும் இந்த அறிக்கை, வாழ்நாள் கல்வி, சுகாதாரம், வீடமைப்பு, நீடித்த நிலைத்தன்மை, பொருளியல், பாதுகாப்பு, பன்னாட்டு உறவு உள்ளிட்ட துறைகளில் சிங்கப்பூரின் நிலை பற்றிய விவரங்களைக் கொண்டுள்ளது.

ஆரம்பக் கல்வி முதல் வேலையிலிருந்து ஓய்வு பெறுவது வரை சிங்கப்பூரர்களுக்கு வாய்ப்புகள் ஏற்படுத்துவதில் பொதுவாக முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது.

எடுத்துக்காட்டாக, தேவையை ஈடுகட்டும் விதமாக முழுநேர பாலர் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை 200,000க்குமேல் உயர்த்தப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டு 25 வயதுக்கும் 64 வயதுக்கும் இடைப்பட்ட சிங்கப்பூர்வாசிகளின் (residents) வேலைவாய்ப்பு விகிதம் 82.6 விழுக்காடாக இருந்தது. ஒப்புநோக்க, கொவிட்-19 கிருமிப்பரவலுக்கு முன்பு 2019ஆம் ஆண்டு இந்த விகிதம் 80.8 ஆகப் பதிவானது.

பொதுவாக, சிங்கப்பூரில் வசிப்பவர்களின் ஊதியமும் கடந்த சில ஆண்டுகளில் உயர்ந்துவருகிறது.

அத்துடன், 2023ல் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் பயிற்சிகளைப் பெற்றோர்களில் 98 விழுக்காட்டினர், பயிற்சிக்குப் பிறகு வேலையை மேலும் சிறப்பாகச் செய்வதாகவும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

பாதுகாப்புப் பணியில் இளம் அதிகாரிகள் சேர்வதை  அதிகம் காணமுடிவதாகக் கூறுகிறார் சிவமணி தியாகராஜன், 49.
பாதுகாப்புப் பணியில் இளம் அதிகாரிகள் சேர்வதை அதிகம் காணமுடிவதாகக் கூறுகிறார் சிவமணி தியாகராஜன், 49. - படம்: ஏடோஸ்

“படிப்படியான சம்பள உயர்வு முறை அறிமுகமான பிறகு பாதுகாப்பு அதிகாரிகளின் சம்பளம் அதிகரித்துள்ளது. மேலும், திறன்களை வளர்ப்பதில் அதிகக் கவனம் செலுத்தப்படுகின்றது. இவற்றுக்கு அப்பாற்பட்டு குறைவான வேலைப் பளுவால் எங்களால் அதிக நேரம் இளைப்பாறவும் முடிகிறது. இத்துறையில் வேலைசெய்வதைப் பெருமையாகக் கருதுகிறேன். பாதுகாப்புப் பணி முன்பு ஓய்வு வேலையாகக் கருதப்பட்டது. இப்போது இளம் அதிகாரிகள் இத்துறையில் நுழைவதை அதிகம் காணமுடிகிறது. படிப்படியான சம்பள உயர்வு முறை இருப்பதால் திறன்களை மேம்படுத்தி, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த ஊக்கமாக உள்ளது,” என்று ஏடோஸ் பாதுகாப்பு சேவையில் மூத்த பாதுகாப்பு மேற்பார்வையாளராக இருக்கும் சிவமணி தியாகராஜன் சொன்னார்.

வலுவடையும் பொருளியல், குடும்பங்கள்

வளர்ச்சி காணும் துறைகளில் நிலையான வேலை வாய்ப்புகள் உள்ளன. 2023ல் புதிதாக உருவாக்கப்பட்ட வேலைகளில் 56.3 விழுக்காடு, நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் தொழில்நுட்பர்களுக்காக (PMET) உருவாக்கப்பட்டவை.

இத்தகைய வேலைகளில் இருக்கும் சிங்கப்பூர்வாசிகளின் எண்ணிக்கை, 2019ல் 58.4 விழுக்காடாக இருந்தது. 2023ல் அது 62.6 விழுக்காடாக உயர்ந்தது.

அத்துடன், வருமானச் சமத்துவமின்மையை அளவிடும் ஜினி குறியீடு (Gini Index), கடந்த ஆண்டு 0.371க்குக் குறைந்தது.

குறைந்த வருமான ஊழியர்களுக்குக் கைகொடுக்கும் அரசாங்க ஆதரவுத் திட்டங்களின் தாக்கத்தை இது பிரதிபலிப்பதாக அறிக்கை குறிப்பிடுகிறது.

சிங்கப்பூரர்களின் திருமணம், பிள்ளைப்பேறு ஆகியவற்றை ஆதரிக்கும் குழந்தை போனஸ் திட்டம், மகப்பேற்று விடுப்பு போன்றவற்றுக்குக் கூடுதலான ஆதரவையும் அரசாங்கம் வழங்கிவருகிறது.

வீடுகளுக்கான காத்திருப்பு நேரம் குறைவு

வீடமைப்பு குறித்து விவரித்த அந்த அறிக்கை, குறைவான காத்திருப்பு நேரத்திற்குள் கட்டுப்படியாகக்கூடிய விலையில் பொது வீடுகள் வழங்கப்படுவதாகக் குறிப்பிட்டது.

வீடமைப்புக் கழக வீடுகளுக்கான காத்திருப்பு நேரம், 2022ல் ஏறத்தாழ ஐந்து ஆண்டுகளாக இருந்தது. 2023ல் அது கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் பத்து மாதங்களாகக் குறைந்ததை ஆய்வு சுட்டியது.

வீட்டு மேம்பாட்டுத் திட்டம், அக்கம்பக்கப் புதுப்பிப்புத் திட்டம் ஆகிய திட்டங்களின் மூலமாக அந்த வீடமைப்புகளை மேம்படுத்தி வருவதாகவும் அறிக்கை குறிப்பிடுகிறது.

உலகில் ஆக அதிக ஆயுட்காலம் கொண்டுள்ள மக்களில் சிங்கப்பூரர்கள் அடங்குவர் என்றும் அறிக்கை குறிப்பிடுகிறது.

இங்குப் பெண்களுக்கான சராசரி ஆயுட்காலம் 87.7 ஆகவும் ஆண்களுக்கு 83.6 ஆகவும் உள்ளன.

ரத்தக் கொழுப்பு, நீரிழிவு போன்ற நோய்களின் பரவல் குறைக்கப்பட்டதுடன் ஆரோக்கியமான, துடிப்பான வாழ்க்கைமுறையை ஆதரிப்பதற்கான திட்டங்கள் பின்பற்றப்படுகின்றன.

இருந்தபோதும் உடற்பருமன், உயர் ரத்த அழுத்தம் ஆகிய சிக்கல்கள் அதிகரித்துள்ளன.

குறிப்புச் சொற்கள்
வீடமைப்பு வளர்ச்சிக் கழகம்ஆய்வுநிதிகல்வி