கிளமெண்டியில் சுயமாக கத்தியால் குத்திக்கொண்டவரைத் தடுத்த பொதுமக்கள்

கிளமெண்டியில் சுயமாக கத்தியால் குத்திக்கொண்டவரைத் தடுத்த பொதுமக்கள்

1 mins read
33a4a5f9-6350-4f4b-bd94-77e3ced3a72f
கத்தியால் குத்திக்கொண்டவருக்கு பொதுமக்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். - படம்: சீன நாளிதழ் வாசகர்
multi-img1 of 2
Google News Preferred Icon

கிளமெண்டி அவென்யூ 3, புளோக் 441B அருகே திங்கட்கிழமை (ஆகஸ்ட் 10) மதியம் சுமார் 12.20 மணியளவில் கத்தியுடன் ஒருவர் இருப்பதாகக் காவல்துறைக்கு உதவி அழைப்பு வந்தது.

அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தபோது, 34 வயது ஆடவர் ஒருவர் உடலில் காயங்களுடன் சுயநினைவோடு கிடப்பதைக் கண்டனர்.

அவருக்கு ஏற்பட்ட காயங்கள் அவராகவே ஏற்படுத்திக்கொண்டவை என்று நம்பப்படுகிறது.

அவர் கத்தியால் தம்மைத் தாமே பலமுறை குத்திக்கொண்டதாக நேரில் பார்த்தவர்கள் கூறியதாக சேனல் நியூஸ் ஏஷியா செய்தி தெரிவித்தது.

காவல்துறை அதிகாரிகள் வருவதற்கு முன்னதாக, அங்கிருந்த 56 வயது ஆடவர் ஒருவர் துணிச்சலுடன் செயல்பட்டு, அந்த ஆடவரிடமிருந்த கத்தியைப் பறித்து அவரை மடக்கிப் பிடித்தார். மற்றொருவர் காயமடைந்தவரின் காயத்திற்கு முதலுதவி செய்ய முயன்றதாகவும் கூறப்பட்டது.

சம்பவத்தில் கத்தியைப் பறித்த 56 வயது ஆடவருக்குக் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை இருவரைத் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனை, இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனைக்குக் கொண்டு சென்றது.

காயம் ஏற்படுத்திக் கொண்ட 34 வயது ஆடவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவம் குறித்துக் காவல்துறை விசாரணை நடத்திவருகிறது.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்கத்திக்குத்துஆடவர்காவல்துறைசிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை