ஆண்டுதோறும் இடம்பெறும் பொதுப் போக்குவரத்துக் கட்டடண மாற்றம் தொடர்பில் புதிய கணக்கீட்டு முறை பின்பற்றப்படும் என்று பொதுப் போக்குவரத்து மன்றம் அறிவித்து இருக்கிறது.
ரயில், பேருந்துக் கட்டணங்களுக்கான புதிய கணக்கீட்டு முறை இவ்வாண்டு முதல் 2027ஆம் ஆண்டுவரை செயல்பாட்டில் இருக்கும்.
இப்போதைக்கு `கட்டமைப்புக் கொள்ளளவுக் காரணி'யின் அடிப்படையில் கட்டண முறை மறுஆய்வு இடம்பெற்று வருகிறது. இனி, அதற்குப் பதிலாக `கொள்ளளவு மாற்றக் காரணி'யின் அடிப்படையில் கட்டண மறுஆய்வு இடம்பெறும். கொள்ளளவு மாற்றக் காரணியானது ஆண்டிற்கு 1.1 விழுக்காடு என நிலையான அளவில் இருக்கும்.
கொவிட்-19 பரவலுக்குமுன் கட்டமைப்புக் கொள்ளளவுக் காரணியானது 1.6 விழுக்காடு முதல் 3.9 விழுக்காடுவரை இருந்தது. ஆனால், பயணிகளின் எண்ணிக்கையில் பெரும் சரிவு ஏற்பட்டதால் அக்காரணியின் மதிப்பும் கூடியது.
அதனால், 2020 பிப்ரவரிக்குப் பிறகு கட்டணக் கணக்கீட்டு முறையிலிருந்து அந்தக் காரணி நீக்கப்பட்டது.
ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை கட்டணக் கணக்கீட்டு முறை குறித்த மறுஆய்வு இடம்பெறுவது வழக்கம். அண்மைய மறுஆய்வு நடவடிக்கைக்காகப் பொதுப் போக்குவரத்து மன்றம் பத்துப் பேர் கொண்ட பணிக் குழுவை அமைத்தது.
பயணிகள், கல்வியாளர்கள், பொதுப் போக்குவரத்து சேவை வழங்குநர்கள், தேசிய போக்குவரத்து ஊழியர்கள் தொழிற்சங்கம் எனப் பலதரப்பினருடனும் மன்றம் கலந்துரையாடியது. அதனைத் தொடர்ந்து, கட்டணக் கணக்கீட்டு முறைக்கான ஐந்து காரணிகளில் மூன்றைத் தொடர்ந்து கருத்தில்கொள்ள மன்றம் முடிவுசெய்தது.
அம்மூன்றும் மூலாதாரப் பணவீக்கம், ஊதியம், எரிபொருள் விலை ஆகியவற்றில் ஆண்டிற்கு ஆண்டு ஏற்படும் மாற்றங்களைக் காட்டும் காரணிகள்.
புதிய கணக்கீட்டு முறை மூலம் கட்டணங்களில் செய்யப்படும் மாற்றம் பெரிதும் ஏற்ற இறக்கமாக இராது என்று மன்றம் குறிப்பிட்டது.
அத்துடன், சமூக, பொருளியல் சூழல் காரணமாக கட்டண மாற்றங்களை அடுத்தடுத்த கட்டண மறுஆய்வு நடவடிக்கைகள்வரை தள்ளிப்போடுவதற்கான செயல்முறையைத் தொடரவும் மன்றம் முடிவுசெய்துள்ளது.
அதாவது, கொவிட்-19 நோய்ப்பரவல், எரிபொருள் விலையில் பெரும் ஏற்றம் போன்ற சூழ்நிலையில் கட்டண உயர்வால் ஏற்படும் தாக்கத்தைத் தணிக்க அம்முறை உதவுகிறது.
சென்ற ஆண்டு கட்டணத்தை 2.9 விழுக்காடு உயர்த்திக்கொள்ள அனுமதி வழங்கிய மன்றம், 10.6 விழுக்காடு உயர்வை இவ்வாண்டு மறுஆய்வு நடவடிக்கைவரை தள்ளிப்போட்டது.
"கட்டண உயர்வைத் தள்ளிப் போடுவதால் அரசாங்கம் கூடுதல் மானியங்களை வழங்க வேண்டியிருக்கும் என்பதையும் பொதுப் போக்குவரத்து மன்றம் கவனத்தில் கொண்டுள்ளது," என்று மன்றம் தெரிவித்தது.
அரசாங்கம் தற்போது ஆண்டிற்கு $2 பில்லியனுக்கும் அதிகமான தொகையைப் பொதுப் போக்குவரத்து மானியங்களாக வழங்கி வருகின்றது.
அண்மைய கட்டணக் கணக்கீட்டு முறை மறுஆய்வு நடவடிக்கையானது சரியான நேரத்தில் மேற்கொள்ளப்பட்டது என்றும் ஆனால் அது சவாலானதாக இருந்தது என்றும் மன்றத்தின் தலைவர் ஜெனட் ஆங் கூறினார்.
"14 ஆண்டுகளில் இல்லாத அளவு பணவீக்க உயர்வு, எரிபொருள் விலையில் ஏற்ற இறக்கம், உயர்ந்துவரும் மனிதவளச் செலவுகள் ஆகியவை ஒருபக்கம் இருக்க, கொவிட்-19 பரவலுக்குப் பிறகு பயணம் செய்வோர் எண்ணிக்கை கூடியுள்ளதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. அதே வேளையில், பொதுப் போக்குவரத்து அமைப்பில் தொடர்ந்து மேம்பாடுகள் இடம்பெற்று வருகின்றன," என்றார் திருவாட்டி ஆங்.
பரிந்துரைகள் ஏற்பு
இதனிடையே, பொதுப் போக்குவரத்து மன்றம் முன்வைத்துள்ள புதிய கட்டணக் கணக்கீட்டு முறையையும் அதன் பரிந்துரைகளையும் அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாகப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்து உள்ளது.
கட்டுப்படியாகும் வகையிலான கட்டணம், பொதுப் போக்குவரத்து அமைப்பின் நிதி நிலைத்தன்மை என இரண்டிற்கும் இடையே சமநிலையைப் பேண மன்றத்தின் பரிந்துரைகள் இலக்கு கொண்டுள்ளன என்று போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் தெரிவித்தார்.
மேலும், கட்டணத்தில் ஏற்ற இறக்கத்தைக் குறைக்க உதவுவதும் அவற்றின் நோக்கம் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

