செந்தோசா தீவிற்கு அருகாமையில் அமைந்துள்ள புலாவ் பிரானியையும் செந்தோசாவையும் நில மீட்புப் பணிகளின் மூலம் இணைக்கவுள்ளதாகப் பிரதமர் லாரன்ஸ் வோங் தமது தேசிய தினப் பேரணி உரையில் அறிவித்துள்ளார்.
இதன்மூலம், இவ்விரண்டு தீவுகளும் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரு மாபெரும் உல்லாசத் தலம் கட்டப்படவுள்ளது.
‘புலாவ் பிரானி’ மலாய் மொழியில் ‘துணிச்சல் மிக்கவர்களின் தீவு’ என்று பொருள்படும். ஆரம்பக் காலங்களில் கடலோடிகளான ‘ஓராங் லாவுட்’ சமூகத்தினரின் வசிப்பிடமாக இருந்த இத்தீவு, பின்னர் சிங்கப்பூரின் முக்கியக் கடற்படைத் தளமாகச் செயல்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, 1992ல் பிரானி முனையம் திறக்கப்பட்டு, சிங்கப்பூரின் துறைமுக வர்த்தகத்தில் அது பெரும் பங்காற்றி வருகிறது. இங்குள்ள துறைமுக நடவடிக்கைகள் அனைத்தும் படிப்படியாகப் புதிய துவாஸ் பெருந்துறைமுகத்திற்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளன.
இந்த இடமாற்றம் முழுமையடைந்த பிறகு, பிரானி தீவை உருமாற்றுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்று பிரதமர் குறிப்பிட்டார். இத்தீவு கிட்டத்தட்ட 1.22 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது.
புலாவ் பிரானியில் முற்றிலும் புதிய ஈர்ப்பிடங்களையும் புதிய அனுபவங்களையும் உருவாக்க முடியும் என்று சுட்டிக்காட்டிய திரு வோங், தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் அதன் புதிய ‘டெளன்டவுன் சவுத்’ உல்லாசத் தலத்தை அங்கு அமைக்கும் என்றும் கூறினார்.
“இந்தத் திட்டங்கள் நமது தெற்கு நீர்முகப்பை முழுமையாக மாற்றியமைத்து, சிங்கப்பூரர்களுக்கும் சுற்றுப்பயணிகளுக்கும் முற்றிலும் புதியதோர் அனுபவத்தை வழங்கும்,” என்றார் அவர்.
இத்தகைய மேம்பாடுகளால் மக்கள் புதிய இடங்களைப் பார்த்து ரசிப்பதற்குக் கூடுதல் வசதிகள் வழங்கப்படும் எனப் பிரதமர் வோங் நம்பிக்கை தெரிவித்தார்.


