சிங்கப்பூருக்குச் சொந்தமான தெக்கோங் தீவுக்கு அருகில் நிலமீட்புப் பணிகள் நிறைவடைந்துவிட்டன.
கடலிலிருந்து மீட்கப்பட்ட தாழ்வான நிலப்பகுதியின் பரப்பளவு தோ பாயோ நகரத்தைப் போல ஏறத்தாழ இருமடங்கு அளவிலானது.
இத்தகவலைத் திங்கட்கிழமையன்று (செப்டம்பர் 8) அரசாங்கம் வெளியிட்டது.
சராசரி கடல்மட்டத்துக்குக் கீழ் உள்ள கடற்பகுதியிலிருந்து சிங்கப்பூர் நிலத்தை மீட்டிருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
கடல்மட்டத்துக்கு 1.2 மீட்டர் கீழ் புதிய நிலப்பரப்பு உள்ளது. மீட்கப்பட்ட நிலப்பகுதியின் பரப்பளவு ஏறத்தாழ 800 ஹெக்டர்.
தெக்காங் தீவின் வடமேற்குப் பகுதியில் நிலம் மீட்கப்பட்டுள்ளது.
தெக்கோங் தீவு சிங்கப்பூருக்குச் சொந்தமான தீவுகளில் ஆகப் பெரியது. இத்தீவு தேசிய சேவையாளர்களின் அடிப்படை ராணுவப் பயிற்சிக்காகப் பயன்படுத்தப்படுகிறது.
தற்போது புதிதாக மீட்கப்பட்டுள்ள நிலமும் ராணுவப் பயிற்சிக்காகப் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இதன்மூலம் சிங்கப்பூரில் தற்போது ராணுவப் பயிற்சிக்காகப் பயன்படுத்தப்படும் இடங்களை மற்ற பயன்பாடுகளுக்காக பயன்படுத்தலாம்.
சிங்கப்பூரர்களுக்காகப் புதிய வீடுகள் கட்டுவது, புதிய வசதிகளை அமைத்துத் தருவது போன்றவை அவற்றில் அடங்கும்.
இத்தகவலை வீடமைப்பு வளர்ச்சிக் கழகமும் பொதுப் பயனீட்டுக் கழகமும் (பியுபி) தெரிவித்தன.
கடலிலிருந்து புதிதாக மீட்கப்பட்டுள்ள தாழ்வான நிலப்பகுதியைப் பிரதமர் லாரன்ஸ் வோங் திங்கட்கிழமை (செப்டம்பர் 8) நேரில் சென்று பார்வையிட்டார்.
திரு வோங் தேசிய வளர்ச்சி அமைச்சராக இருந்தபோது 2016ஆம் ஆண்டில் இத்திட்டத்தை அறிமுகப்படுத்தி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
2100ஆம் ஆண்டுக்குள் சிங்கப்பூரைச் சுற்றியுள்ள கடற்பகுதியில் கடல்மட்டம் 5 மீட்டர் வரை உயரக்கூடும் என்று பருவநிலை முன்னுரைப்புகள் தெரிவித்துள்ளன.
எனவே, புதிய நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ள கடலோரத் தடுப்பணை பேருதவியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் ஆக உயரமான பகுதி 6 மீட்டர் உயரம்.
தேவை ஏற்படும்போது கடலோரத் தடுப்பணையை உயர்த்தலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பருவநிலை மாற்றம் காரணமாக மழையின் தீவிரம் அதிகரித்துள்ளது.
புதிய தாழ்வான நிலப்பகுதியில் வெள்ளம் ஏற்படாதிருக்கவும் நீர் தேங்கிக் கிடக்காமல் இருக்கவும் 45 கிலோமீட்டர் கழிவுநீர் குழாய்க் கட்டமைப்பு கட்டப்பட்டுள்ளது.
நிலமீட்புப் பணிகள் 2025ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நிறைவடைந்தவுடன், வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தெக்கோங் தீவை நிர்வகிக்கும் பொறுப்பை, பியுபி, தற்காப்பு அமைச்சு ஆகியவற்றிடம் ஒப்படைக்கும்.