தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உணவுப் பட்டியலில் பருப்புகளைச் சேர்க்க வலியுறுத்தும் ஓராண்டுத் திட்டம்

3 mins read
c8137b2f-9065-4067-8cdc-292fc5540eba
‘ஃபேர்மவுண்ட் ஹோட்டலில்’ நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்ற பேராளர்கள். - படம்: லாவண்யா வீரராகவன்

சிங்கப்பூரில் ‘பீன்ஸ் ஆன் தி மெனு’ எனும் ஒராண்டுகால முன்னெடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

மே 2025 முதல் ஏப்ரல் 2026 வரை திட்டமிடப்பட்டுள்ள இம்முன்னெடுப்பு, உணவுக்கடைகள், பள்ளிகள், மருத்துவமனைகள் என அனைத்து இடங்களின் உணவுப்பட்டியலிலும் ‘பீன்ஸ்’ (பருப்பு) வகை உணவுகளைச் சேர்க்க வேண்டும் என்றும் அதன் தாக்கத்தைக் கண்காணிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

பருப்பு வணிகர்களும் அத்துறையில் செயல்படும் பலரும் சந்தித்து கருத்து பரிமாறவும், பருப்புகள் தொடர்பான கொள்கை உருவாக்கங்கள் குறித்துக் கலந்தாலோசிக்கவும், சந்தை ஆராய்ச்சி, புத்தாக்கம் ஆகியவற்றை ஊக்குவிக்கவும் வழிவகுக்கும் விதமாக நடைபெற்ற பருப்பு வகைகளுக்கான அனைத்துலக மாநாட்டில் இது அறிவிக்கப்பட்டது.

உணவுப் பாரம்பரியத்துடன் நெருக்கமான தொடர்புடைய பருப்பு உணவுகளை மீட்டெடுத்தல், பொதுச் சுகாதார மேம்பாடு, சிங்கப்பூரின் உணவு இறக்குமதியைப் பன்முகப்படுத்துதல், நீடித்த நிலைத்தன்மை ஆகிய வகைகளில் இந்த முன்னெடுப்பு பெருந்தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஏறத்தாழ 47 நாடுகளிலிருந்து 650 பேர் பங்கேற்ற இந்நிகழ்ச்சி மே 21, 22 ஆம் தேதிகளில் ‘ஃபேர்மவுண்ட் ஹோட்டலில்’ நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பல்வேறு நிபுணர்களின் உரைகளும் கலந்தாய்வுக் கூட்டங்களும் இடம்பெற்றன.

இந்நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் சிங்கப்பூருக்கான இந்தியத் தூதர் ஷில்பாக் அம்புலே பங்கேற்றார்.

நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்துப் பேசிய அனைத்துலக பருப்பு உணவுப்பொருள் கூட்டமைப்பின் (Global Pulse Confederation) தலைவர் விஜய் ஐயங்கார், பருப்பு வகைகளின் உற்பத்தியையும் நுகர்வையும் அதிகரிப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்றார்.

மேலும், “பருப்பு வகைகள் பிற புரத உணவுகளைக் காட்டிலும் விலை குறைவானது. பிற தாவர வகைகளைக் காட்டிலும் பருப்பு வகைப் பயிர்களுக்குக் குறைவான நீர் போதுமானது. மண்ணில் நைட்ரஜன் நிலைப்படுத்தலுக்கு இவை வழிவகுக்கும்,” என்றார் அவர்.

“பயிர்ச் சுழற்சிக்கு இவை பெரிதும் உதவும்,” எனக் குறிப்பிட்ட திரு விஜய், “காலநிலை மாற்றங்களைக் கருத்தில்கொண்டு சத்து மிகுந்த, நிலைத்தன்மைக்கு ஊறு விளைவிக்காத பருப்பு வகைகள் குறித்த விழிப்புணர்வை உணவுத்துறையில் இருப்போரிடையே ஏற்படுத்தும் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன,” என்று சொன்னார்.

நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்துப் பேசிய அனைத்துலக பருப்பு உணவுப்பொருள் கூட்டமைப்பின் தலைவர் விஜய் ஐயங்கார்.
நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்துப் பேசிய அனைத்துலக பருப்பு உணவுப்பொருள் கூட்டமைப்பின் தலைவர் விஜய் ஐயங்கார். - படம்: லாவண்யா வீரராகவன்

தொடர்ந்து, வேளாண் துறையில் முதலீட்டு முன்னுரிமைகள் குறித்தும் அவற்றின் நிலைத்தன்மை தாக்கம் குறித்தும் உரையாற்றினார் தெமாசெக்கின் வேளாண் உணவு முதலீட்டுத் துறை நிர்வாக இயக்குநர் அனூஜ் மகேஸ்வரி.

சிங்கப்பூர் குறைந்தது 30 விழுக்காட்டு உணவை உள்ளூரில் தயாரிப்பதாகக் கூறிய அவர், “பல இன மக்கள் வாழும் சிங்கப்பூரில் உணவு என்பது அடையாளம். பருப்பு வகைகள் பாரம்பரிய உணவுக்கானது என்பது மட்டுமன்றி எதிர்காலத்துக்கான தீர்வு எனும் பாதையை நோக்கிச் செல்ல வேண்டும்,” என்றார்.

தெமாசெக் நிறுவனம், வேளாண் உணவுப் புத்தாக்கத்தில் கடந்த பத்தாண்டுகளாக அதிக அளவில் முதலீடு செய்து வருவதைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், அனைத்துலக வேளாண் உணவுத் திட்டங்களில் மாற்றங்கள் வர வேண்டும் என்றும் தெரிவித்தார்.

‘விவசாயத்தின் மாறிவரும் முகம்: உணவுப் பாதுகாப்பின்மை, காலநிலை மாற்றத்திற்கான சமூக தீர்வில் பருப்புகளின் முக்கியப் பங்கு’ எனும் தலைப்பில் பேசினார் கனடாவின் ஏஜிடி உணவு, மூலப்பொருள்களின் தலைமை நிர்வாக அதிகாரி முராத் அல் காதிப்.

உலக மக்கள்தொகை அதிகரிப்பு, பசி, விளைநிலங்கள் இழப்பு, மக்களிடம் அதிகரிக்கும் நலம் குறித்த எண்ணம், தாவர அடிப்படையில் அமைந்த புரதத்திற்கான தேவை போன்ற பலவற்றைக் குறித்தும் அவர் பேசினார்.

குறிப்பிட்ட பருப்பு வகைகள் குறித்து நடைபெற்ற கலந்தாய்வுகளில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வணிகர்களும் வல்லுநர்களும் பங்கேற்றனர்.
குறிப்பிட்ட பருப்பு வகைகள் குறித்து நடைபெற்ற கலந்தாய்வுகளில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வணிகர்களும் வல்லுநர்களும் பங்கேற்றனர். - படம்: அனைத்துலக பருப்பு உணவுப்பொருள் கூட்டமைப்பு

தொடர்ந்து பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வல்லுநர்கள் கலந்துகொண்ட, பருப்பு வகைகளின் விளைநிலங்கள், விளைச்சல், ஏற்றுமதி, இறக்குமதி, சந்தை நிலவரங்கள், விலைகள் எனப் பல்வேறு அம்சங்கள் தொடர்பிலான குழு விவாதங்களும் நடைபெற்றன.

நிகழ்ச்சியின் இரண்டாம் நாளான வியாழக்கிழமை பருப்பு வணிகத்தை மின்னிலக்கமயமாக்கல், துறையின் எதிர்காலக் கணிப்புகள் போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டன.

குறிப்புச் சொற்கள்