லாரியும் காரும் மோதிக்கொண்ட விபத்து ஒன்றில் ஐந்து வெளிநாட்டு ஊழியர்கள் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
விபத்து மார்ச் 1ஆம் தேதி (சனிக்கிழமை) பொங்கோல் வட்டாரத்தில் நிகழ்ந்ததாக அறியப்படுகிறது.
பொங்கோல் ஈஸ்ட், பொங்கோல் சென்ட்ரல் சாலைச் சந்திப்பில் ஏற்பட்ட விபத்து குறித்துத் தங்களுக்கு மாலை 6.40 மணியளவில் தகவல் கிடைத்ததாகக் காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.
லாரியில் பயணம் செய்த ஐவரும் சுயநினைவுடன் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர். ஐவரின் வயதும் 25க்கும் 45க்கும் இடைப்பட்டது என்று கூறப்படுகிறது.
ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதன் தொடர்பில் 41 வயது லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் விசாரணை நடந்துவருகிறது என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இருவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட மறுத்துவிட்டதாகக் குடிமைத் தற்காப்புப் படையினர் கூறினர்.
இதற்கிடையே, விபத்தில் காயமுற்றவர்கள் வெளிநாட்டு ஊழியர்கள் என்று சீன நாளிதழான ஷின் மின் டெய்லி நியூஸ் அறிந்து வந்தது.
லாரியின் பின்பகுதியில் இரண்டு ஊழியர்கள் கிடப்பதைக் காட்டும் படங்கள் நாளிதழுக்கு வழங்கப்பட்டன. குப்புறப் படுத்திருந்த ஒருவரது நெற்றியிலிருந்து ரத்தம் வருவதைக் காண முடிந்தது. அவருக்கு அருகில் ரத்தம் தெறித்தும் இருந்தது.
தொடர்புடைய செய்திகள்
விபத்து நடந்தபோது லாரியின் முன்னிருக்கையில் மூவர் இருந்ததாகவும் பின்னால் மூவர் இருந்ததாகவும் லாரி ஓட்டுநர் குறிப்பிட்டதாக ஷின் மின் தெரிவித்தது.

