பொங்கோலில் குறிப்பிட்ட சில சூழல்களில் தானியக்க வாகனங்களைச் சோதனை செய்வதை நிறுத்துமாறு கிராப் நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தானியக்க வாகனம் ஒன்றுக்கும் சிறுமிக்கும் இடையே நூலிழையில் தவிர்க்கப்பட்ட விபத்துகுறித்து நிலப் போக்குவரத்து ஆணையம் விசாரணை நடத்திவரும் நிலையில், சோதனை ஓட்டத்தை நிறுத்தும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை (நவம்பர் 5) இரவில் ஃபேஸ்புக் பக்கத்தில் இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி வெளியானது.
வாகனம் இடப்பக்கமாகத் திரும்பியபோது, சாலையைக் கடக்க முயன்ற சிறுமிமீது மோதுவது போலச் சென்றது அக்காணொளியில் தெரிந்தது. சிறுமியுடன் பெண் ஒருவரும் காணப்பட்டார். அந்தப் பதிவு இணையத்தில் ஆயிரக்கணக்கானோரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த ஆணையம், சம்பவம்குறித்து விசாரணை நடத்திவருவதாகக் கூறியது.
பொங்கோல் வட்டாரத்தில் தேவைக்கேற்பப் பயணச் சேவையை மேம்படுத்தும் நோக்கில் அந்த வாகனம் புதிய பாதையில் சோதனை நடத்திக்கொண்டிருந்ததாக ஆணையம் தெரிவித்தது. இப்பயணச் சேவை, நடப்பு ஆண்டின் நான்காம் காலாண்டில் பொதுமக்களுக்கு விரிவுபடுத்தப்படவுள்ளது.
பாதசாரிகள் இருவரையும் வாகனம் கண்டறிந்ததாக முதற்கட்டத் தரவுகள் தெரிவிக்கின்றன.
பச்சை விளக்கு ஒளிர்ந்த பிறகே வாகனம் திரும்பியது. சிறுமி சாலையைக் கடக்கத் தொடங்கியதும் வாகனம் வேகத்தைக் குறைத்து வலப்பக்கமாகச் சென்றது.
வாகனத்தில் இருந்த பாதுகாப்பு அதிகாரி உடனே அதன் கட்டுப்பாட்டைத் தம் கையில் எடுத்துக்கொண்டு வாகனத்தைத் திருப்பினார்.
விசாரணை முடியும் வரை இது போன்ற சந்திப்புகளில் சோதனை ஓட்டத்தை நிறுத்துமாறு கிராப் நிறுவனத்திற்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
காணொளியைப் பகிர்ந்ததற்காகப் பொதுமக்களுக்கு ஆணையம் நன்றி தெரிவித்துக்கொண்டது. அதே நேரம், சாலைகளைக் கடக்கும் முன்னர் எதிரே வரும் வாகனங்கள் முழுமையாக நிற்பதைக் கவனிக்குமாறு பாதசாரிகளுக்கு அது நினைவூட்டியது.
சம்பவம் தொடர்பாக ஆணையத்துடனும் ‘வீரைடு’ நிறுவனத்துடனும் இணைந்து மறுஆய்வு செய்துவருவதாக கிராப் நிறுவனத்தின் பேச்சாளர் கூறினார்.
பொதுமக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
