பொங்கோல் தானியக்க வாகனச் சேவை ஏப்ரல் 1 தொடக்கம்

இலவச சேவைக்கு பொதுமக்கள் முன்பதிவு செய்யலாம்

பொங்கோல் தானியக்க வாகனச் சேவை ஏப்ரல் 1 தொடக்கம்

2 mins read
2fb22b93-6896-4b93-9b1b-45027cf79b79
பொதுமக்கள் மூன்று பாதைகளில் ஒன்றில் இலவசப் பயணம் மேற்கொள்ளலாம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பொங்கோல் வட்டாரத்தில் குறுகிய தூரம் செல்லக்கூடிய ஓட்டுநரில்லாத் தானியக்க வாகனச் சேவை ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

அதற்கான முன்பதிவு புதன்கிழமை (மார்ச் 25) முதல் rideair.ai என்ற இணையத்தளத்தில் தொடங்கியுள்ளது.

மே 1ஆம் தேதிவரை வார நாள்களில் காலை 9.30 முதல் மாலை 5.30 மணிவரை பேருந்துச் சேவை இருக்கும். பொங்கோல் மேற்கு - கிழக்கு, மேற்கு - வடக்கு, பொங்கோல் கோஸ்ட் கடைத்தொகுதியில் இருந்து ஒரு சிறு வழித்தடம் ஆகிய மூன்று பாதைகளில் சேவை இடம்பெறும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தனது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 1 முதல் தொடக்கத்தில் இச்சேவை இலவசமாக வழங்கப்படும்.

2026ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் வாகனச் சேவை முழுமையாகச் செயல்படும்போது, ஒரு பயணத்திற்கு $4 கட்டணம் செலுத்த வேண்டும்.

கிராப், சீன நிறுவனமான ‘வீரைட்’ இரண்டும் இணைந்து 11 வாகனங்களுடன் இச்சேவையை வழங்குகின்றன. இந்த வாகனங்கள் ஏற்கெனவே 25,000 கிலோமீட்டருக்கும் அதிகமான தொலைவு சோதிக்கப்பட்டுள்ளன. பயணத்தின்போது தானியங்கி தொழில்நுட்பம் குறித்த விளக்கங்களும் பயணிகளுக்கு வழங்கப்படும்.

பொங்கோல் கிழக்கையும் வடக்கையும் இணைக்கும் மூன்றாவது வழித்தடத்தில் கம்ஃபர்ட்டெல்குரோ நிறுவனத்தால் இயக்கப்படும் தானியங்கி வாகனங்கள் சேவையாற்ற உள்ளன. தற்போது அதற்கான சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. விரைவில் வாகனச் சேவையை அழைப்பின் பேரில் பொதுமக்கள் இலவசமாகச் சோதிக்கலாம் என்று போக்குவரத்து மூத்த துணையமைச்சர் சுன் ஷுவெலிங் தெரிவித்தார்.

பொதுமக்கள் தானியங்கித் தொழில்நுட்பத்தை நேரில் அறியவும், வாகன சேவை வழங்குவோரிடம் கருத்து தெரிவிக்கவும் இந்த முன்னோட்டத் திட்டம் உதவும் என முன்னதாக நாடாளுமன்றத்தில் திருவாட்டி சுன் தெரிவித்திருந்தார்.

குறிப்புச் சொற்கள்