வடக்கு கிழக்கு பெருவிரைவு ரயில் (MRT) பாதையில் அமைந்துள்ள பொங்கோல் கோஸ்ட் நிலையம் வரும் டிசம்பர் மாதம் 10ஆம் தேதி பிற்பகல் மூன்று மணிக்குப் பயணிகளுக்குத் திறந்துவிடப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் வியாழக்கிழமையன்று (அக்டோபர் 10) அறிவித்தது.
திறக்கப்பட்ட பிறகு பொங்கோல் கோஸ்ட் நிலையம்தான், 22 கிலோமீட்டர் நீளம்கொண்ட வடக்கு கிழக்குப் பாதையின் கடைசி நிலையமாக இருக்கும். அதனைத் தொடர்ந்து அப்பாதையில் மொத்தம் 17 நிலையங்கள் இருக்கும்.
பொங்கோல் கோஸ்ட் நிலையம், பொங்கோல் மின்னிலக்க வட்டாரத்தில் (Punggol Digital District) அமைந்துள்ளது. அதன் மூலம் ஜேடிசி வர்த்தக வட்டாரத்தில் புணிபுரியும் 28,000க்கும் அதிகமான ஊழியர்களுக்குக் கூடுதல் போக்குவரத்து வசதி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பொங்கோலில் உள்ள சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகத்தின் (SIT) கிளையில் பயிலும் சுமார் 12,000 மாணவர்கள், அப்பகுதியில் கட்டப்படும் பொங்கோல் கோஸ்ட் கடைத்தொகுதிக்குச் செல்வோர் ஆகியோரும் பலனடைவர். பொங்கோல் கோஸ்ட் கடைத்தொகுதி, கடந்த செப்டம்பர் மாதம் முதல் கட்டங்கட்டமாக அமைக்கப்பட்டு வருகிறது.
பொங்கோல் கோஸ்ட் ரயில் நிலையங்களின் நுழைவாயில்களில் ஒன்று சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. மற்றொரு நுழைவாயில் நியூ பொங்கோல் ரோட்டில் அமைந்துள்ளது.
அந்த வட்டாரத்தில் இருக்கும் நெக்சஸ் சமூக நிலையத்துக்குக்கீழ் அமைந்துள்ள பொங்கோல் கோஸ்ட் நிலையத்திலிருந்து பொங்கோல் கோஸ்ட் பேருந்து முனையம் நடக்கும் தூரத்தில் அமைந்திருப்பதாக நிலப் போக்குவரத்து ஆணையம் குறிப்பிட்டுள்ளது. பொங்கோல் கோஸ்ட் நிலையத்தில் 300க்கும் அதிகமாக சைக்கிள் நிறுத்துமிடங்கள் இருக்கும் என்றும் ஆணையம் தெரிவித்தது.
பொங்கோல் கோஸ்ட் ரயில் நிலையத்துக்கான கட்டுமானப் பணிகள் 2018ஆம் ஆண்டு தொடங்கின. அந்நிலையம், கடந்த ஆகஸ்ட் மாதம் ரயில் சேவை நிறுவனமான எஸ்பிஎஸ் டிரான்சிட்டிடம் ஒப்படைக்கப்பட்டது.
வடக்கு கிழக்குப் பாதை ரயில் சேவையை நிர்வகிக்கும் எஸ்பிஎஸ் டிரான்சிட், புதிய நிலையத்தைத் திறப்பதை முன்னிட்டு சோதனைகளை மேற்கொண்டது.
தொடர்புடைய செய்திகள்
பொங்கோல் கோஸ்ட் நிலையம் உட்பட வடக்கு கிழக்கு ரயில் பாதையில் அமைந்துள்ள நிலையங்கள் அனைத்தும், 200,000க்கும் அதிகமான குடும்பங்களில் இருப்போர் 10 நிமிடங்களுக்குள் நடந்து செல்லக்கூடிய தூரத்தில் அமைந்துள்ளன. மத்திய வட்டாரத்துக்குப் பயணம் மேற்கொள்ளும் பொங்கோல்வாசிகளுக்குப் புதிய நிலையம் பலனளிக்கும் என்று போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் வியாழக்கிழமையன்று ஃபேஸ்புக்கில் குறிப்பிட்டார்.