பொங்கோல் ஈஸ்ட் கன்டெய்னர் பார்க் இந்த ஆண்டின் இறுதியில் மூடப்படவுள்ளது.
அந்த இடத்தில் புதிய குடியிருப்புகள் கட்டப்படவுள்ளன. அதற்காக அந்த நிலம் அரசாங்கத்திடம் மீண்டும் ஒப்படைக்கப்படவுள்ளது.
சிங்கப்பூர் நில ஆணையம் அந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.
கன்டெய்னர் பார்க் உள்ள நிலத்தின் குத்தகை ஒப்பந்தம் வரும் டிசம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. அதனைத் தொடர்ந்து குத்தகை நீட்டிக்கப்பட மாட்டாது என்று ஆணையம் தெரிவித்துள்ளது.
“கன்டெய்னர் பார்க்கின் முக்கியக் குத்தகைதாரரான சிட்டி ஸ்பிரவுட்ஸ் நிறுவனத்திற்கு மே மாதத்தில் அதிகாரபூர்வமாக கடிதம் அனுப்பப்பட்டது. டிசம்பர் மாத இறுதிக்குள் அந்த இடத்தைக் காலி செய்து ஒப்படைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது,” என்று ஆணையம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறியது.
கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக பொங்கோல் ஈஸ்ட் கன்டெய்னர் பார்க் இயங்கி வருகிறது. திறந்தவெளி வானம், நீர்நிலை காட்சிகள் என மக்கள் ஓய்வெடுக்கும் இடமாக அது திகழ்ந்தது.
மேலும் அங்கு உணவகங்கள், விளையாட்டு வசதிகள் எனப் பல வசதிகள் இருந்ததால் அது மக்கள் மத்தியில் பிரபலமானது.
பொங்கோல் ஈஸ்ட் கன்டெய்னர் பார்க்கில் உள்ள உணவுக்கடைகள் அக்டோபர் இறுதி வரை மட்டுமே செயல்படும்.
உணவகங்கள் மட்டுமின்றி, பிளே பிக்கிள், ஆர்க் புளோக் உடற்பயிற்சிக் கூடம் போன்ற பல்வேறு பொழுதுபோக்கு வசதிகளும் முழுமையாக மூடப்படுகின்றன.
இந்த அறிவிப்பால் குத்தகைதாரர்களும் வாடிக்கையாளர்களும் கவலையடைந்துள்ளனர். சில உணவக உரிமையாளர்கள் தங்களது வெளிநாட்டு ஊழியர்களின் எதிர்காலம் குறித்துக் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சிட்டி ஸ்பிரவுட்ஸ் நிறுவனம் பாசிர் ரிஸ் பூங்காவிற்கு இடமாறுகிறது. அதனால் அந்த நிறுவனத்தின் சில குத்தகைதாரர்கள் அங்கு மாறுகின்றனர்.
தங்களது மனதிற்கு மிகவும் நெருக்கமான பொங்கோல் ஈஸ்ட் கன்டெய்னர் பார்க் மூடப்படுவது குறித்து வாடிக்கையாளர்கள் சமூக ஊடகங்களில் வருத்தத்தைப் பதிவு செய்து வருகின்றனர்.
இருப்பினும், புதிய தலைமுறையினருக்குக் குடியிருப்புகள் கிடைக்க இந்த நடவடிக்கை உதவும் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.


