பொங்கோல் ஈஸ்ட் கன்டெய்னர் பார்க், அதனை ஒட்டியுள்ள தெபிங் லேனில் செயல்படும் நான்கு முக்கியக் குத்தகைதாரர்களின் குத்தகைக் காலம், 2027ஆம் ஆண்டின் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதாவது, அப்பகுதிகளில் உள்ள நிலங்களின் குத்தகை ஒப்பந்தம் வரும் டிசம்பர் மாதத்துடன் முடிவடைவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், குத்தகைக் காலம் முடிவடைந்த பின்னர், அப்பகுதி குடியிருப்புப் பயன்பாட்டிற்காக மறுமேம்பாடு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது ஓராண்டு வரை குத்தகைக் காலத்தை நீட்டிப்பதற்கான வாய்ப்பு மேற்குறிப்பிட்ட நான்கு வர்த்தகங்களுக்கு வழங்கப்படவுள்ளது.
இது தொடர்பாகப் பொங்கோல் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் யோ வான் லிங் அக்டோபர் 3ஆம் தேதி வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில், “குத்தகைக் காலம் விரைவில் முடிவடைவது குறித்து பொங்கோல் ஈஸ்ட் கன்டெய்னர் பார்க்கில் செயல்படும் வர்த்தகங்கள் கவலை தெரிவித்தனர். அதனால், அது தொடர்பாகச் சம்பந்தப்பட்ட அரசாங்க அமைப்புகளுடன் அண்மையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது,” எனக் குறிப்பிட்டார்.
மேலும், மேம்பாட்டுத் திட்டங்களுக்கான கால அவகாசம் மறுஆய்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்த நான்கு முக்கியக் குத்தகைதாரர்களுக்கும் குத்தகைக் காலத்தை நீட்டிக்கும் வாய்ப்பை அரசு வழங்கியதாகத் திருவாட்டி யோ தமது பதிவில் தெரிவித்தார்.
இருப்பினும், அந்தப் குத்தகைதாரர்களின் விவரங்களை அவர் வெளியிடவில்லை.
மேலும், பாதிக்கப்பட்ட வர்த்தகங்கள் மாற்று இடங்களைக் கண்டறிய உதவச் சிங்கப்பூர் நில ஆணையம் , ஜூரோங் நகராண்மைக் கழகம் , தேசியப் பூங்காக் கழகம், வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் ஆகிய அமைப்புகள் தொடர்ந்து துணைபுரியும் என்றும் பொங்கோல் பகுதி உட்படக் கிடைக்கக்கூடிய மாற்று இடங்களை ஆராய உரிய அரசாங்க நில உரிமையாளர்கள், முகவர்கள் ஆகியோருடன் வர்த்தகங்களை இணைக்கும் முயற்சிகள் தொடரும் என்றும் அவர் கூறினார்.
