பொங்கோல் நார்த்ஷோர் வட்டாரத்தில் புதிதாகக் குடியேறியுள்ள ‘பிடிஓ’ குடியிருப்பாளர்கள் குரங்குகளால் ஏற்படும் தொல்லை குறித்துக் கவலை தெரிவிக்கின்றனர்.
நடந்து செல்வோரிடமிருந்து உணவு, பானங்களை அவை பறிப்பதாக அவர்களில் சிலர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினர்.
பிடிஓ திட்டத்தின்கீழ் விற்பனையான ‘பொங்கோல் பாயிண்ட் கிரவுன்’ வீடுகளுக்குக் கடந்த ஏப்ரல் மாதம் முதல் குடிபெயர்ந்துவரும் குடியிருப்பாளர்கள், அந்தக் குடியிருப்புப் பேட்டையில் பல குரங்குகள் சுற்றித் திரிவதாகக் கூறினர்.
வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகள்மேல் இக்குரங்குகள் ஏறுவதையும் கீழ்த்தளத்தில் உண்பதையும் காட்டும் காணொளிகள் குடியிருப்பாளர் குழுக்களில் பகிரப்பட்டுள்ளன.
குரங்குகள் உணவு தேடி வீடுகளுக்குப் படையெடுக்கக்கூடும் என்ற அச்சத்தில் சிலர் கம்பி வலைகளைப் பொருத்தியுள்ளனர்.
நீண்டவால் குரங்குகள் இந்த வட்டாரத்தில் காணப்படுவது குறித்து அறிந்திருப்பதாகவும் செப்டம்பர் 18ஆம் தேதி நிலவரப்படி இதன் தொடர்பில் 38 புகார்கள் பெறப்பட்டதாகவும் தேசியப் பூங்காக் கழகம் கூறியது.
நீண்டவால் குரங்குகள் காடுகளின் விளிம்பில் வாழும் இயல்புடையவை. அவை உணவு, வசிப்பிடம் தேடி காட்டுப் பகுதியில் அங்குமிங்கும் செல்பவை என்று கழகம் குறிப்பிட்டது.
செப்டம்பர் 17ஆம் தேதி ‘பொங்கோல் பாயிண்ட் கிரவுன்’ பகுதியில், 10க்கு மேற்பட்ட குரங்குகள் கட்டுமானத் தளத்திலும் இன்னும் திறக்கப்படாத விளையாட்டுத் திடலிலும் காணப்பட்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியது.
தொடர்புடைய செய்திகள்
சில நேரங்களில் குரங்குகள் கூட்டமாக கோனித் தீவுப் பூங்காவுக்கு அருகில் உள்ள பூங்கா இணைப்புப் பாதையை மறித்து நிற்பதாகக் குடியிருப்பாளர்கள் சிலர் கூறினர்.
குழந்தைகளை அவை தாக்கக்கூடும் என்ற அச்சத்தைச் சிலர் குறிப்பிட்டனர்.
சிங்கப்பூர் தொழில்நுட்பக் கல்விக்கழகத்தின் புதிய வளாகம் நியூ பொங்கோல் ரோட்டில் அமைந்துள்ளது. அங்கும் குரங்குகள் காணப்படுவதாக மாணவர்கள் சிலர் கூறினர்.
தேசியப் பூங்காக் கழகம் இப்பிரச்சினைக்குத் தீர்வுகாண முயல்வதாகத் தெரிவித்துள்ளது. உணவுப் பொருள்களை மறைத்து வைக்கும்படியும் குப்பைகளை முறையாக வீசும்படியும் அந்த வட்டாரக் குடியிருப்பாளர்கள், பள்ளிகள், கடைக்காரர்கள் எனப் பலரையும் அது கேட்டுக்கொண்டுள்ளது.
நீண்டவால் குரங்குகளுக்கு உணவு அளிக்கவேண்டாம் என்று பொதுமக்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
திறந்தவெளியில் இவற்றை எதிர்கொள்ள நேரிட்டால் அமைதியாக இருக்கும்படியும் விரைவான அசைவுகளைத் தவிர்க்கும்படியும் அவற்றை நேருக்கு நேர் பார்க்க வேண்டாம் என்றும் ஆலோசனை கூறப்பட்டுள்ளது.
வேறு திசையில் பார்த்தவாறு, மெதுவாகப் பின்னடையவும் குரங்குகள் அங்கிருந்து செல்லும்வரை அப்பகுதிக்குச் செல்ல வேண்டாம் என்றும் அது கேட்டுக்கொண்டது.
இக்குரங்குகள் பிளாஸ்டிக் பைகளில் உணவு இருக்குமென நினைத்துப் பறிக்க முயலும் என்று கழகம் நினைவூட்டியது.