குடியரசின் முதல் வெளிப்புற ‘போச்ச’ (Boccia) மைதானத்தைக் கொண்ட ஒரு புதிய சிகிச்சைத் தோட்டம், டிசம்பர் 12ஆம் தேதி பொங்கோல் பூங்காவில் திறக்கப்பட்டுள்ளது.
முதியவர்கள், சக்கர நாற்காலியைப் பயன்படுத்துபவர்கள் உட்பட பயனர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்தத் தோட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. தேசிய பூங்காக் கழகத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள 2,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இத்தோட்டத்தில் முதலாவது வெளிப்புற சக்கர நாற்காலி தடைப் பயிற்சி மைதானமும் உள்ளது.
இயன்மருத்துவம் மற்றும் பொழுதுபோக்கு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தக்கூடிய சிகிச்சைத் தோட்டத்தில் அனைவரையும் உள்ளடக்கிய முதலாவது சுறுசுறுப்புப் பயிற்சித் தடமும் இந்தத் தோட்டத்தில் உள்ளது.
டிமென்ஷியா எனும் மூத்தோர் மறதி நோய் அல்லது சிறப்புத் தேவைகள் உள்ளவர்கள் உட்பட, மக்கள் தங்கள் நல்வாழ்வை மேம்படுத்த இயற்கையுடன் தொடர்புகொள்வதற்கு சிகிச்சைத் தோட்டங்கள் உதவுகின்றன.
சிகிச்சைத் தோட்டத்தை டிசம்பர் 12ஆம் தேதி திறந்துவைத்த தேசிய வளர்ச்சி இரண்டாம் அமைச்சர் இந்திராணி ராஜா, “இயற்கையுடன் அர்த்தமுள்ள தொடர்புகளை வளர்ப்பதற்காக, உடல் மற்றும் மன நலத்தை மேம்படுத்தக்கூடிய அம்சங்களை உள்ளடக்கிய சிகிச்சைத் தோட்டங்கள் உருவாக்கப்படுகின்றன.
“இயற்கை மற்றும் தோட்டக்கலையில் ஒருவர் ஈடுபடும்போது அது மன அழுத்தத்தைக் குறைத்து, மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன, ”என்று அவர் டிசம்பர் 12ஆம் தேதி அன்று ஓர் அறிக்கையில் கூறினார்.
“எல்லா வயதையும் திறன்களையும் கொண்ட சிங்கப்பூரர்களுக்கு மிகவும் அணுகக்கூடிய, இயற்கை அடிப்படையிலான அனுபவங்களை வழங்க எங்கள் பூங்காக்களையும் தோட்டங்களையும் நாங்கள் தொடர்ந்து மேம்படுத்துவோம்,” என்றும் அமைச்சர் கூறினார்.
இந்தப் புதிய தோட்டமானது சிங்கப்பூரில் உள்ள சிகிச்சைத் தோட்டங்களின் எண்ணிக்கையை 16க்கு உயர்த்தியுள்ளது. 2030ஆம் ஆண்டுக்குள், தீவு முழுவதும் 30 சிகிச்சைத் தோட்டங்கள் இருக்கும். முதலாவது சிகிச்சைத் தோட்டம் ஹார்ட்பார்க்கில் 2016ல் உருவாக்கப்பட்டது.
தோட்டம் இரண்டு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் உடற்பயிற்சியில் ஈடுபடக்கூடிய துடிப்பான மண்டலம். மற்றொன்று மக்கள் ஓய்வெடுக்கும் மண்டலம்.
துடிப்பான மண்டலத்தின் மையத்தில் சிங்கப்பூரின் முதல் வெளிப்புற ‘போச்ச’ (Boccia) விளையாட்டு மைதானம் உள்ளது. இந்த மைதானத்தில் உடற்குறையுள்ள பயனர்கள் பாராலிம்பிக் விளையாட்டை முயற்சிக்கலாம். மேலும் இவ்விடத்தை பலபயன் இடமாகவும் பயன்படுத்தலாம்.
உருட்டுப்பந்து போல ஆடப்படும் இந்த ‘போச்சா’ விளையாட்டை சக்கர நாற்காலிப் பயனாளர்களும் உடலாற்றல் குறைபாடு உடையவர்களும் விளையாடலாம்.