பொங்கோல், செங்காங் இலகுரயில் நிலையங்களில் ஜூன் 9ஆம் தேதி அதிகாலை 5.45 மணியிலிருந்து தடைபட்ட ரயில் சேவை காலை 10.12 மணிக்கு வழக்க நிலைக்குத் திரும்பியதாக எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சமிக்ஞைக் கோளாற்றால் ரயில்கள் ஓடவில்லை என்று அது குறிப்பிட்டது.
சேவை நிலவரம் குறித்து எக்ஸ் தளத்திலும் ஃபேஸ்புக்கிலும் அது தொடர்ந்து பதிவிட்டது.
“பயணிகளுக்கு நேர்ந்த சிரமத்திற்கு வருந்துகிறோம்,” என்று காலை10.34மணிக்கு எக்ஸ் தளத்தில் எஸ்பிஎஸ் நிறுவனம் பதிவிட்டது.
முன்னதாக, பாதிக்கப்பட்ட ரயில் நிலையங்களுக்கு அருகிலும் செங்காங் பேருந்து முனையத்திலும் இலவசப் பேருந்துச் சேவைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அது கூறியிருந்தது.
அந்த இலவசப் பேருந்துச் சேவைகள் காலை 10.20 மணிக்கு நிறுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட பயணிகள் இந்த இலவசப் பேருந்துச் சேவைகளைப் பயன்படுத்த அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டிருந்ததாகவும் நிலைய ஊழியர்களும் அவர்களுக்கு வழிகாட்டும் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் எஸ்பிஎஸ் டிரான்சிட் தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
பாதிக்கப்பட்ட இலகுரயில் நிலையங்களிலிருந்து வெளியேறும் பயணிகளுக்கு பயணக் கட்டணம் கழிக்கப்படமாட்டாது என்றும் அது கூறியது.
மேல்விவரங்களுக்கு எஸ்பிஎஸ் டிரான்சிட் செயலி அல்லது நிலப் போக்குவரத்து ஆணையத்தின் மை டிரான்ஸ்போர்ட் செயலியை நாடலாம்.

