விலங்குவதையை விளையாட்டாக நினைப்போரைத் தண்டித்து, மற்றவர்களுக்கு அறிவு புகட்டுக: அமைச்சர் சண்முகம்

2 mins read
5627d47a-c84c-4b5f-a9eb-f60570e04d58
விலங்குவதை தொடர்பில் கருத்துரைத்த அமைச்சர் திரு சண்முகம், இவ்வகை கொடுஞ்செயல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது என்று கூறினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

விலங்குகளுக்குத் தீங்கு விளைவிப்பதை ஒரு விளையாட்டாகக் கருதுவோர் தண்டிக்கப்படவும், மற்றவர்களுக்கு அதுகுறித்து அறிவு புகட்டப்படவும் வேண்டும் என்று கூறியுள்ளார் தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சரும், உள்துறை அமைச்சருமான திரு கா.சண்முகம்.

‘‘இப்பிராணிகளுக்கு என்று குரலில்லை; எனவே அவை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை உறுதிசெய்வது நம் பொறுப்பு,’’ என்றும் சுட்டினார் அமைச்சர்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் ஈசூன், பொங்கோல், தெம்பனிஸ் உள்ளிட்ட வட்டாரங்களில் பூனைகள் மாண்ட சம்பவங்களை மேற்கோள் காட்டிய திரு சண்முகம், விலங்கு வதைச் சம்பவங்களை அரசாங்கம் சகித்துக்கொள்ளாது என்று உறுதிபடத் தெரிவித்தார்.

பூனைகளைத் துன்புறுத்தி, அவற்றை வீடமைப்பு வளர்ச்சிக் கழக அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து கீழே எறிந்து கொன்ற குற்றத்திற்காக நபர் ஒருவருக்கு விதிக்கப்பட்டிருந்த சிறைத்தண்டனை சில நாள்களுக்கு முன்னர் அதிகரிக்கப்பட்டது நினைவிருக்கலாம். 

இதற்கிடையே, விலங்குவதை தொடர்பில் கருத்துரைத்த திரு சண்முகம், ‘‘வன்செயல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது; இதன் தொடர்பில் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.

“குற்றம் இழைப்போரைச் சுதந்தரமாக விட்டுவிட முடியாது,” என்று குறிப்பிட்டார்.

இக்கருத்தை முன்வைத்த அதேவேளையில், மிகைப்படுத்தப்பட்ட குற்றமயமாக்கல் குறித்தும் எச்சரித்தார் அமைச்சர்.

“எப்போதும் சட்டங்களை மீறுவோர் சிறிய எண்ணிக்கையில்  இருக்கக்கூடும்; எனவே இலக்குடன் கூடிய நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவது அவசியமாகிறது,” என்றார் திரு சண்முகம்.

மேலும், விலங்குகளைத் துன்புறுத்துபவர்கள், அதனை விளையாட்டாக நினைப்பவர்கள் ஆகியோருக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

‘‘சிங்கப்பூரில் பெரும்பாலானவர்கள் சட்டத்தை மதித்து நடப்பவர்கள். செல்லப்பிராணிகள் வைத்திருப்போர் பலர் அர்த்தமிகு அக்கறையுடன் திகழ்கின்றனர்,’’ என்பதைச் சுட்டிய திரு சண்முகம், தீங்கு புரியும் நோக்கம் இல்லாமல் தவறு புரிவோர் தொடர்பில் நியாயமான அணுகுமுறை கையாளப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும், அவர்களுக்குச் செல்லப்பிராணிகளை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்பது குறித்த வழிகாட்டல் கல்வியும் கற்பிக்கப்பட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்த அவர், “இல்லையென்றால் அதிகமானோர் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை வரும். அதனை யாரும் விரும்புவதில்லை,” எனவும் கருத்துரைத்தார்.

எனினும், விலங்குகளைத் துன்புறுத்தும் நோக்கில் நடந்துகொள்வோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திக் கூறினார் அமைச்சர் கா சண்முகம்.

குறிப்புச் சொற்கள்