நாடு மாறினாலும் விளையாட்டு மீதான நாட்டம் மாறாது

2 mins read
47a52cdd-25af-4da9-939f-998fd271b557
அயராது ஆற்றிய பணிக்காக ‘டீம் நிலா’ இயக்கத்தின் பத்தாம் ஆண்டு நிறைவு விருந்தில் கவிதாவுக்குத் தங்க விருதும் அவருடைய கணவர் அமுதனுக்கு வெண்கல விருதும் வழங்கப்பட்டன. - படம்: ரவி சிங்காரம்

ஒரு நிகழ்ச்சியின் வெற்றியை உறுதிசெய்வதில் தொண்டூழியர்களின் பங்கு மிக முக்கியம்.

பிடித்தமான சில நடவடிக்கைகளை விட்டுக்கொடுத்து, நேரத்தை ஒதுக்கி தொண்டூழியம் செய்யும் எத்தனையோ பேரில் ஒருவர் கவிதா சாந்தராஜ்.

கணவர் அமுதன் உதயனுடன் 2018ஆம் ஆண்டு சிங்கப்பூருக்குக் குடிபெயர்ந்த கவிதாவுக்கு விளையாட்டில் மிகுந்த ஆர்வம்.

சக டீம் நிலா தொண்டூழியர்களுடன் அமுதன்-கவிதா இணையர் (வலது ஓரம்).
சக டீம் நிலா தொண்டூழியர்களுடன் அமுதன்-கவிதா இணையர் (வலது ஓரம்). - படம்: கவிதா சாந்தராஜ்

கூடைப்பந்து, ஓட்டப்பந்தயம், வீச்சுப்பந்து (throwball), குண்டெறிதல் (shot put), ஈட்டியெறிதல் போன்றவை கவிதாவுக்கு விருப்பமான விளையாட்டுகள்.

அப்படி ஒரு விளையாட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது, ‘டீம் நிலா’ எனும் விளையாட்டு மூலம் தொண்டூழியம் செய்யும் இயக்கத்தின் பளிச்சிடும் ஊதா சட்டை கவிதாவின் கண்ணில் பட்டது.

சிங்கப்பூரர்கள் மட்டுமல்ல நிரந்தரவாசிகளும் ‘டீம் நிலா’ குழுவில் தொண்டூழியர்களாக இணையலாம் என்று தெரிந்தவுடன் உடனே களத்தில் குதித்தார் கவிதா.

மாநில அளவில் விளையாட்டுகளில் இந்தியாவில் பங்கேற்றுள்ள கவிதா, சிங்கப்பூர் வந்ததும் தொண்டூழியம் மூலம் விளையாட்டில் இணைந்தார்.
மாநில அளவில் விளையாட்டுகளில் இந்தியாவில் பங்கேற்றுள்ள கவிதா, சிங்கப்பூர் வந்ததும் தொண்டூழியம் மூலம் விளையாட்டில் இணைந்தார். - படம்: ரவி சிங்காரம்

2023ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 550க்கும் மேற்பட்ட மணிநேரம் ‘டீம் நிலா’ தொண்டூழியராக அவர் செயல்பட்டுள்ளார்.

இவ்வளவு அர்ப்பணிப்புடன் செயல்பட்ட அவரைத் தேடி வந்தது தொண்டூழியத் தலைவராவதற்கான வாய்ப்பு. 2024ஆம் ஆண்டு ‘ஃபிடே’ சதுரங்கப் போட்டியில் தொண்டூழியர் குழுக்களில் ஒன்றுக்கு கவிதா தலைமை தாங்கினார்.

அவ்வின்பம் தனக்கு மட்டுமானதன்று எனக் கருதிய அவர், ஒரு மாதத்திலேயே கணவர் அமுதனையும் ‘டீம் நிலா’ குழுவில் சேரச் செய்தார்.

இம்மாதம் 22ஆம் தேதி சனிக்கிழமை நடந்த ‘டீம் நிலா’ இயக்கத்தின் பத்தாம் ஆண்டு நிறைவு விருந்தில் கவிதா, அமுதன் உள்பட 421 தொண்டூழியர்கள் சிறப்பிக்கப்பட்டனர்.

அயராது ஆற்றிய பணிக்காக கவிதாவுக்குத் தங்க விருதும் அமுதனுக்கு வெண்கல விருதும் வழங்கப்பட்டன.

தங்க விருதாளர்களுக்குக் கலாசார, சமூக, இளையர்துறை மற்றும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுகளின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் எரிக் சுவா விருது வழங்கினார்.

சென்ற ஆண்டு தொடங்கிய ‘டீம் நிலா’ இயக்கத்தின் தொண்டூழியத் தலைவர் திட்டம், ஆண்டிறுதிக்குள் அதன் தொண்டூழியத் தலைவர்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க விரும்புவதாகத் திரு சுவா கூறினார்.

இவ்வாண்டின் இறுதியில் தாய்லாந்தில் நடைபெறவுள்ள தென்கிழக்காசிய விளையாட்டுகளிலும் உடற்குறையுள்ளோருக்கான ஆசியான் விளையாட்டுகளிலும் 100க்கும் மேற்பட்ட ‘டீம் நிலா’ தொண்டூழியர்கள் சேவை வழங்கவிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

2029ஆம் ஆண்டு தென்கிழக்காசிய விளையாட்டுகள் சிங்கப்பூரில் நடைபெறும். அப்போது தாய்லாந்தில் கிடைத்த அனுபவம் தொண்டூழியர்களுக்குக் கைகொடுக்கும் என்று திரு சுவா நம்புவதாகக் குறிப்பிட்டார்.

நீடிக்கும் தொண்டூழியத்தை ஊக்குவிக்க பள்ளிகள், அமைப்புகளுடன் இணைந்த புதிய பங்காளித்துவ மேம்பாட்டுத் திட்டத்தையும் அவர் அறிவித்தார்.

அடுத்த ஆண்டு ‘டீம் நிலா’ தொண்டூழியத் தலைவர்கள், பங்காளிகளுக்கென இரண்டு புதிய பிரிவுகளில் விருது வழங்கப்படும் என்று திரு சுவா சொன்னார்.

நான்கு வயதுக்கு மேற்பட்ட மாணவர்களையும் தொண்டூழியத்தில் ஈடுபடுத்த ‘லிட்டில் டீம் நிலா’ தொண்டூழியர் திட்டம் அறிவிக்கப்பட்டது.

தங்க விருது பெற்ற தொண்டூழியர்கள் (இடமிருந்து) காளிமுத்து பார்த்தசாரதி, செல்வராஜ் சக்திவேல், ரவி வெங்கடே‌ஷ் குமார்.
தங்க விருது பெற்ற தொண்டூழியர்கள் (இடமிருந்து) காளிமுத்து பார்த்தசாரதி, செல்வராஜ் சக்திவேல், ரவி வெங்கடே‌ஷ் குமார். - படம்: ரவி சிங்காரம்
வெண்கல விருது வென்ற சாய் விஸ்வநாத், 37, அதிர்‌ஷ்டக் குலுக்கலிலும் வென்றார்.
வெண்கல விருது வென்ற சாய் விஸ்வநாத், 37, அதிர்‌ஷ்டக் குலுக்கலிலும் வென்றார். - படம்: ரவி சிங்காரம்
குறிப்புச் சொற்கள்