பிரமிடு மோசடி: இலவச விருந்துகள் ஆடம்பர வாக்குறுதிகளால் சிக்கிய சிங்கப்பூரர்கள்

பிரமிடு மோசடி: இலவச விருந்துகள் ஆடம்பர வாக்குறுதிகளால் சிக்கிய சிங்கப்பூரர்கள்

2 mins read
80467b7c-f72d-40f5-9a25-b7acd5972729
மார்ச் மாதம் சீனாவுக்குச் சென்றபோது, சிங்கப்பூர் அரசு ஊழியரான ஆலிஸ் (உண்மைப் பெயர் அல்ல) தங்கியிருந்த சொகுசு வீட்டு வளாகத்தில் இருந்து தெரிந்த காட்சி. இத்தகைய ஆடம்பரங்களை காட்டி பலர் ‘பிரமிட்’ நிதி மோசடி வலையில் சிக்கவைக்கப்பட்டனர்.  - படம்: ஆலிஸ்
Google News Preferred Icon

சீனாவின் நான்னிங் நகரில் செயல்பட்டு வந்த பிரம்மாண்ட ‘பிரமிட்’  நிதி மோசடி அமைப்பில் சிக்கி, நூற்றுக்கணக்கான சிங்கப்பூரர்கள் தங்களது பெருந்தொகையை இழந்துள்ள தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இலவச ஆடம்பர உணவுகள், மிகக் குறைந்த விலையிலான அழகுப் பராமரிப்புகள், அதிநவீன சொகுசு வீடுகளைக் காட்டி இவர்கள் வலையில் வீழ்த்தப்பட்டுள்ளனர்.  

இந்த சட்டவிரோத நிதி மோசடி தொடர்பில் தென் சீனப் பகுதியான குவாங்சியில்  சீனக் காவல்துறையினர் அண்மையில் நடத்திய சோதனையில்  ‘பிரமிட்’ திட்டத்தில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 52 சிங்கப்பூரர்கள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாகச் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சும்  காவல்துறையும் அண்மையில் உறுதிப்படுத்தின. 

இந்நிலையில் ‘1040 சன்ஷைன் புராஜெக்ட்’ என்ற பெயரில் பரவலாக அறியப்படும் இந்த மோசடி, சீன அரசின் ஆதரவு பெற்ற வளர்ச்சித் திட்டம் என்ற போலி முகமூடியுடன் பல ஆண்டுகளாகச் செயல்பட்டதாக தெரியவந்துள்ளது. 

இதில் முதலீடு செய்ய விரும்பும் நபர்களைச் சுற்றுலா என்ற பெயரில் சீனாவுக்கு அழைத்துச் செல்லும் அமைப்பாளர்கள், அங்குள்ள சொகுசு வீடுகள், வணிக மையங்களைச் சுற்றிக் காட்டி, இத்திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் குறுகிய காலத்தில் பல மில்லியன் டாலர்களை ஈட்டலாம் என்ற மாயையை உருவாக்குகின்றனர்.  

சுமார் $30,000 முதல் $50,000 வரையிலான தொகையை நுழைவுக் கட்டணமாகச் செலுத்தி இத்திட்டத்தில் இணையும் நபர்கள், அடுத்து புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பதன் மூலம் மட்டுமே லாபம் ஈட்ட முடியும் என்ற நிபந்தனை விதிக்கப்படுகிறது.  புதிய முதலீட்டாளர்களின் பணமே பழைய உறுப்பினர்களுக்குப் பங்கீடாக வழங்கப்படுகிறது. 

அறிமுகமானவர்கள் மூலமே இத்தகைய திட்டங்கள் அதிகளவில் பரப்பப்படுவதால், மக்கள் எளிதில் நம்பிக்கை வைத்து ஏமாந்து விடுகின்றனர்.  இச்சம்பவத்தைத் தொடர்ந்து, சிங்கப்பூர் முதலீட்டாளர்கள் சங்கம்  “நட்பு என்பது நம்பகத்தன்மைக்கான சான்றிதழ் அல்ல” என்றும், சந்தேகத்திற்கிடமான முதலீட்டு வாய்ப்புகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

இத்தகைய மோசடித் திட்டங்களில் பங்கேற்றதாகச் சந்தேகிக்கப்படும் சிங்கப்பூரர்கள் உடனடியாகக் காவல் துறையில் புகார் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.  

குறிப்புச் சொற்கள்
மோசடிநிதி மோசடிசீனாசிங்கப்பூர்சிங்கப்பூரர்