சிங்கப்பூரிலிருந்து வெளியேறும் பேருந்துப் பயணிகள் விரைவில், உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச்சாவடிகளில் கியூஆர் குறியீட்டைப் பயன்படுத்தி குடிநுழைவு நடைமுறையைப் பூர்த்தி செய்ய இயலும்.
நவம்பர் மாத இறுதியில் இதற்கான சோதனைத் திட்டம் தொடங்கும் என்று குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணையம் வியாழக்கிழமை (நவம்பர் 21) தெரிவித்தது.
சிங்கப்பூர்க் குடிமக்கள், நிரந்தரவாசிகள், நீண்டகால வருகை அனுமதி அட்டை வைத்திருப்போர், சிங்கப்பூருக்கு ஏற்கெனவே வருகை தந்த வெளிநாட்டினர் ஆகியோர் இத்திட்டத்திற்குத் தகுதிபெறுவர்.
தற்போது சிங்கப்பூரிலிருந்து மலேசியாவின் ஜோகூருக்கு காரிலோ, மோட்டார்சைக்கிளிலோ, சைக்கிளிலோ செல்லும் பயணிகள் கியூஆர் குறியீட்டைப் பயன்படுத்திக் குடிநுழைவு நடைமுறையைப் பூர்த்தி செய்கின்றனர்.
பேருந்துப் பயணிகளுக்கான சோதனைத் திட்டம், துவாசில் நவம்பர் 23ஆம் தேதி தொடங்கும். உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடி வழியாகச் செல்லும் பேருந்துப் பயணிகளுக்கு அது நவம்பர் 28ஆம் தேதி தொடங்கும் என்று கூறப்பட்டது.
தனியார் வாகனங்களைப் பயன்படுத்தும் பயணிகளைப் போலவே பேருந்துப் பயணிகளும் ஆணையத்தின் செயலியைப் (MyICA) பயன்படுத்தி கியூஆர் குறியீட்டை உருவாக்கலாம்.
தனிநபர்களுக்கோ பயணக் குழுவிற்கோ தனிப்பட்ட கியூஆர் குறியீட்டை அவர்கள் உருவாக்க முடியும்.
செயலியில் வாகன வகை என்று கேட்கப்படும் இடத்தில் ‘பேருந்து’ என்று அவர்கள் குறிப்பிட வேண்டும்.
தொடர்புடைய செய்திகள்
தேர்ந்தெடுக்கப்பட்ட தானியக்க வாகனத் தடங்களிலும் சிறப்பு உதவித் தடங்களிலும் (SALs) இத்திட்டம் சோதிக்கப்படும்.
இரு சோதனைச்சாவடிகளிலும் பேருந்துப் பயணிகள் உள்நுழையும், வெளியேறும் அரங்குகளில் உதவிக் குறிப்புகளைக் கொண்ட அறிவிப்புப் பலகைகளும் இடம்பெற்றிருக்கும் என்று ஆணையம் கூறியது. பயணிகளுக்கு உதவ, அதிகாரிகளும் பணியில் ஈடுபட்டிருப்பர்.
ஒரே கியூஆர் குறியீட்டை அதிகபட்சம் நான்கு பயணிகள் பயன்படுத்த முடியும். வாகனத் தடத்தை அவர்கள் ஒரு குழுவாகவே கடந்து செல்வர். இருப்பினும் அவர்கள் அங்க அடையாளச் சோதனையைத் தனித்தனியாகவே மேற்கொள்ள முடியும்.
இந்த நடைமுறையை மேம்படுத்துவதற்கு உதவும் வகையில், தகுதிபெற்ற பயணிகள் இதைப் பயன்படுத்தும்படி ஆணையம் ஊக்குவிக்கிறது.
தற்போது, மலேசியாவும் ஜோகூரில் அமைந்துள்ள அதன் சோதனைச்சாவடிகளில் பேருந்து, மோட்டார்சைக்கிள் பயணிகளுக்கு கியூஆர் குறியீட்டைப் பயன்படுத்தி குடிநுழைவு நடைமுறையைப் பூர்த்தி செய்யும் திட்டத்தைச் சோதித்துவருகிறது. மலேசியக் குடிமக்கள் மட்டுமே இதற்குத் தகுதிபெறுகின்றனர்.
காரில் செல்லும் பயணிகளுக்கும் வெளிநாட்டினருக்கும் பின்னர் இந்த நடைமுறை விரிவுபடுத்தப்படும்.