தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வகுப்பில் மாணவர் எண்ணிக்கையைவிட ஆசிரியரின் தரம் முக்கியம்: அமைச்சர் சான்

3 mins read
58924925-d9b2-4d31-8b3f-3a98d2fe91fd
அதிகரிக்கும் வெப்பநிலையைச் சமாளிக்க, ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் உதவக்கூடிய புத்தாக்க வழிகளைப் பள்ளிகள் ஆராய்ந்துவருகின்றன. கடந்த மே மாதம் 15ஆம் தேதி, பீட்டி உயர்நிலைப் பள்ளியின் ஆங்கில மொழி மூத்த ஆசிரியர் டோ ஜி ரோங்கும் மாணவர்களும் முழுச் சீருடைக்குப் பதில் பள்ளியின் ‘டி-சட்டை’யை அணிந்து பள்ளிக்குச் சென்றிருந்தனர். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஒரு வகுப்பறையில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையைவிட அதன் ஆசிரியரின் தரமே மாணவர் தேர்ச்சியை நிர்ணயிக்கும் முக்கிய அம்சம் என்று கல்வி அமைச்சர் சான் சுன் சிங் கூறியுள்ளார்.

கூடுதலான ஆசிரியர்களைப் பணியமர்த்துவதன் மூலம் வகுப்பில் மாணவர் எண்ணிக்கையைக் குறைக்கலாம் என்று சிலர் பரிந்துரைத்தாலும் தரமான ஆசிரியருக்கு அது உத்தரவாதம் தருவதில்லை என்றார் அவர்.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்கு அளித்த நேர்காணலில் அமைச்சர் இவ்வாறு கூறினார்.

கடந்த பல ஆண்டுகளில் ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஆசிரியப் பணிக்கான ஆட்சேர்ப்பு மெதுவடைந்தது இதற்குக் காரணம்.

2016ஆம் ஆண்டு 33,378ஆக இருந்த ஆசிரியர்களின் எண்ணிக்கை 2023ல் 30,396ஆகக் குறைந்துவிட்டது. 2024ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் எண்ணிக்கை விவரங்களைக் கல்வி அமைச்சு இன்னும் வெளியிடவில்லை.

இருப்பினும் ஆசிரியர்களின் மொத்த எண்ணிக்கைக்கும் மாணவர் சேர்க்கைக்கும் இடையிலான விகிதம் மேம்பட்டிருப்பதாகத் திரு சான் கூறினார்.

தொடக்கப்பள்ளிகளில் 2014ஆம் ஆண்டில் ஆசிரியர் - மாணவர் விகிதம் 16.5 ஆகப் பதிவானது. 2023ல் அது 15.2 எனக் கூறப்பட்டது.

உயர்நிலைப் பள்ளிகளில் இந்த விகிதம் நிலையாக உள்ளது. 2014ஆம் ஆண்டு 12.5ஆக இருந்த அது 2023ல் 12.6ஆகப் பதிவானது.

கடந்த மூன்று ஆண்டுகளில் இந்த விகிதம் மேம்பட்டிருந்தாலும் அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி போன்ற நாடுகளிலும் பொருளியல் ஒத்துழைப்பு, மேம்பாட்டுக்கான அமைப்பில் உள்ள நாடுகளிலும் உள்ள சராசரி அளவிற்கு ஈடாக இருப்பதாகக் கூறப்பட்டது.

கல்வி அமைச்சு கடந்த பல ஆண்டுகளாக ஆண்டுதோறும் 700 பேரை ஆசிரியப் பணிக்குச் சேர்ப்பதாகத் திரு சான் கூறினார்.

அமெரிக்கா, சீனா, சிங்கப்பூரில் உள்ள பள்ளிகளின் வகுப்பறையில் மாணவர் எண்ணிக்கையை அவர் குறிப்பிட்டார். மூன்று நாடுகளுமே சமமான, ஒட்டுமொத்த ஆசிரியர் - மாணவர் விகிதத்தைக் கொண்டிருந்தாலும் அவற்றின் வகுப்பறைகளில் மாணவர் எண்ணிக்கை மிகவும் வேறுபடுவதை அமைச்சர் சுட்டினார்.

சீனாவில் ஒரு வகுப்பறையில் 70 மாணவர்களும் அமெரிக்காவில் மிகக் குறைவான மாணவர்களும் இருப்பதாகக் கூறிய அவர், சிங்கப்பூர் வகுப்பறைகளில் இவ்விரண்டுக்கும் இடையிலான எண்ணிக்கையில் மாணவர்கள் இருப்பதாகச் சொன்னார்.

இங்குள்ள தொடக்கப்பள்ளிகளில் ஒரு வகுப்பின் மாணவர் எண்ணிக்கை 32 அல்லது 33 என்றாலும், சில பாடங்களின்போது அந்த எண்ணிக்கை குறையக்கூடும்.

அமெரிக்காவில் ஒரு வகுப்பில் 20 பேர் பயில்வர். ஆனால் எல்லாப் பாடங்களுக்கும் அதே எண்ணிக்கையிலான மாணவர்கள் வகுப்பறையில் இருப்பர். இதனால் ஆசிரியரின் பணிச்சுமை இருமடங்காகிறது என்றும் அவர்கள் ஓய்வெடுக்கவோ தங்களை மேம்படுத்திக்கொள்ளவோ முடிவதில்லை என்றும் அமைச்சர் கூறினார்.

சீனாவில் ஆசிரியர்களின் தனிப்பட்ட மேம்பாட்டுக்குக் கூடுதல் நேரம் கிடைக்கிறது. அவர்களின் கல்விமுறை நல்ல தேர்ச்சியைத் தருவதில்லை என்றும் கூறமுடியாது என்றார் திரு சான்.

சிங்கப்பூர், ஆசிரியர்களின் திறன்களை முடிந்தவரை அதிகரிப்பதில் கவனம்செலுத்துகிறது என்றார் அவர்.

பாட அடிப்படையிலான வகைப்பாட்டின்கீழ், ஒரு வகுப்பறையின் மாணவர்கள் குறிப்பிட்ட பாடத்தில் அவர்களது திறனுக்கேற்ப மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றனர். இதனால் ஆசிரியர்கள் குறிப்பிட்ட பிரிவில் உள்ள மாணவர்களுக்கு ஏற்ற கற்பித்தலைப் பின்பற்றவும் பணிச்சுமையைச் சீராக்கவும் முடியும் என்பதை அமைச்சர் சுட்டினார்.

மீத்திறன் கல்வித் திட்டம் (GEP) மறுஆய்வு செய்யப்படுவதற்கு இதுவும் ஒரு காரணம் என்று கூறிய அவர், இனி மாணவர்கள் பொதுவில் மீத்திறன் கொண்டவர்கள் என்றில்லாமல் குறிப்பிட்ட துறையில் மீத்திறன் கொண்டவர்கள் எனக் கருதப்படுவர் என்றார்.

சமூகம் ஆசிரியர்களை மரியாதையுடன் நடத்துவதன் முக்கியத்துவத்தையும் அமைச்சர் சான் வலியுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்