கோலங்கள், மயில்கள், தீபங்கள், மலர்கள் என தீபாவளி தொடர்பான அம்சங்களை அடிப்படையாகக் கொண்ட அலங்காரங்கள் குறிப்பிட்ட சில பெருவிரைவு ரயில்கள், பேருந்துகளில் இடம்பெற்றுள்ளன.
தீபாவளியை முன்னிட்டு ஆண்டுதோறும் களைகட்டும் இந்த அலங்காரங்கள் புதன்கிழமை (அக்டோபர் 1) அதிகாரபூர்வமாக அறிமுகம் கண்டன. தீபாவளி ஒளியூட்டு அலங்காரங்களை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள இவை, ஊதா, வெள்ளை, மஞ்சள் நிறங்களில் மிளிர்கின்றன.
ஆறு ரயில் தடங்களில் உள்ள குறிப்பிட்ட ரயில்கள் மட்டுமன்றி, 3, 12, 43, 67, 85, 147, 154, 190, 674, 960 ஆகிய பேருந்துகளிலும் தீபாவளி அலங்காரங்கள் இடம்பெறும்.
பல்லின மக்களும் சுற்றுப்பயணிகளும் தீபாவளி குறித்த தகவல்களை அறியும் வண்ணம் தகவல் துணுக்குகளும் விரிவாக அறிந்துகொள்ள கியூஆர் குறியீடுகளும் இடம்பெற்றுள்ளன.
அத்துடன், லிட்டில் இந்தியா ரயில் நிலையத்தில் வரைகலைஞர் ஜெயேஷ் சச்தேவின் வடிவமைப்பில் ‘சன்லவ்’ இல்லத்தைச் சேர்ந்த மூத்தோர் 60 பேரின் வடிவமைப்புகளை உள்ளடக்கிய சுவரோவியமும் இடம்பெற்றுள்ளது.
மேலும், சிராங்கூன், உட்லண்ட்ஸ் சவுத், மரின் பரேட், நியூட்டன் ஆகிய ரயில் நிலையங்களிலும் இவ்வகை அலங்காரங்கள் இடம்பெறவுள்ளன.
பண்டிகைக் காலங்களில் பயண அனுபவத்தை மேம்படுத்த லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கம் (லிஷா), இந்திய மரபுடைமை நிலையம், நிலப் போக்குவரத்து ஆணையம், பொதுப் போக்குவரத்து நடத்துநர்களின் ஒன்றிணைந்த முயற்சி இது.
அந்த அலங்காரங்கள் கண்ணைக் கவரும் வகையிலும் அழகாகவும் இருக்கின்றன என்றார் அதனை அதிகாரபூர்வமாகத் தொடங்கி வைத்த சட்ட, போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் முரளி பிள்ளை.
தொடர்புடைய செய்திகள்
“தீபாவளி கொண்டாடுவோர்க்கு கொண்டாட்ட மனநிலையைக் கொணர்வதுடன் பல்லின மக்களிடம் இந்திய மரபுடைமை அம்சங்கள் குறித்த தகவல்களைக் கொண்டுசேர்க்கும் வகையிலும் இந்த அலங்காரங்கள் இடம்பெறுகின்றன. லிஷா அமைப்பின் 25ஆம் ஆண்டு, எஸ்ஜி60 கொண்டாட்டங்களுடன் இது கூடுதல் கொண்டாட்டமாக அமைந்துள்ளது,” என்றார் ‘லிஷா’ அமைப்பின் தலைவர் ரகுநாத் சிவா.
இந்தச் சிறப்பு அலங்காரங்கள் நவம்பர் 11ஆம் தேதிவரை இடம்பெற்றிருக்கும்.