எதிர்வரும் பொதுத் தேர்தலில் ராடின் மாஸ் தனித்தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் டேரல் லோ, நேரடிப் பிரசாரக் கூட்டம் ஏதும் நடத்தமாட்டார்.
அதற்குப் பதிலாக அவர், 12 தொண்டூழியர்களைக் கொண்ட குழுவுடன் சேர்ந்து 15,000 துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து 200 பதாகைகளை மாட்டுவார். தமக்கு அரசியல் பின்னணி இல்லாவிட்டாலும் தமது தொகுதியில் நம்பகமான எதிர்க்கட்சி இல்லாததால் சுயேச்சையாகப் போட்டியிடுவதாக அவர் கூறினார்.
இவ்வாண்டுப் பொதுத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிடும் இரு வேட்பாளர்களில் திரு லோவும் ஒருவர். மற்றொருவர் மவுண்ட்பேட்டன் தனித்தொகுதியில் போட்டியிடும் ஜெரிமி டான்.
இருவரும் முதன்முறையாகத் தேர்தலில் போட்டியிடுகின்றனர். வெற்றிபெற்றால் முழுநேர நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பது இவர்களது இலக்கு.
வேட்புமனுத் தாக்கல் தினமான புதன்கிழமையன்று (ஏப்ரல் 23) ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசியபோது 28 வயதாகும் திரு லோ, “சில வேளைகளில் வெற்றிவாய்ப்பு அதிகம் இல்லாத ஒருவர் (underdog) வெற்றிபெறக்கூடும் என்ற நம்பிக்கை எனக்கு என்றும் இருந்திருக்கிறது. எனது விடாமுயற்சியையும் கடின உழைப்பையும் குடியிருப்பாளர்கள் அறிவர் என நம்புகிறேன்,” என்று கூறினார்.
நாடாளுமன்றம் கலைக்கப்படும் வரை ராடின் மாஸ் நாடாளுமன்ற உறுப்பினராகப் பொறுப்பு வகித்த மெல்வின் யோங், 53, சீர்திருத்த மக்கள் கூட்டணியைச் சேர்ந்த குமார் அப்பாவூ, 56, ஆகியோரை எதிர்த்து திரு லோ போட்டியிடுகிறார்.

