சிங்கப்பூர் அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடிச் சோதனைகளில் மின்னிலக்க நாணய மோசடி மூலம் ஏற்படவிருந்த $17.4 மில்லியன் இழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது. அதில், 383க்கும் அதிகமானோர் பணத்தைப் பறிகொடுப்பதிலிருந்து தப்பினர்.
சிங்கப்பூர்க் காவல்துறை, மின்னிலக்கக் கட்டணச் சேவை வழங்கும் நிறுவனங்கள், வெளிநாட்டுச் சட்ட அமலாக்க அமைப்புகள் ஆகியவை இரண்டு மாதங்களாகச் சோதனை நடவடிக்கைகளை நடத்தின.
செப்டம்பர் 1ஆம் தேதியிலிருந்து கடந்த மாதம் 31ஆம் தேதிவரை மின்னிலக்க நாணயம் தொடர்பான மோசடிகளைக் குறிவைத்து சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக வெள்ளிக்கிழமை (நவம்பர் 6) காவல்துறை வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.
ஐந்தாவது முறையாக மின்னிலக்க நாணய மோசடிகளை குறிவைத்து அதிகாரிகள் அமலாக்க நடவடிக்கைகளை நடத்தினர்.
காய்ன்பேஸ், காய்ன்ஹெக்கோ, டிடிசிபே, ஜெமினி, ஒகேஎக்ஸ், ஸ்ட்ரெய்ட்ஸ்எக்ஸ், அப்பிட் ஆகிய நிறுவனங்களுடன் நடந்த சோதனையைக் காவல்துறையின் இணையத் தளபத்திய குழு முன்னெடுத்தது.
செயினலிஸ், டிஆர்எம் லேப்ஸ் ஆகிய அதிநவீன கருவிகளைப் பயன்படுத்தி பல்வேறு வகையான மோசடிகளில் பாதிக்கப்பட்டுள்ளோரை அதிகாரிகள் அடையாளம் கண்டனர். அவற்றுள் அரசாங்க அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்ட மோசடி, முதலீடு, வேலை வாய்ப்பு மோசடி ஆகியவை அடங்கும்.
சோதனையில் பங்களித்த நிறுவனங்கள், வாடிக்கையாளரின் தகவல்களை வழங்கியதால் தொலைபேசி மூலமும் நேரடியாகவும் அதிகாரிகள் பாதிக்கப்பட்டோரின் இழப்புகளைத் தவிர்க்க முடிந்தது.
அமெரிக்காவின் மத்தியப் புலனாய்வு விசாரணைத் துறை, ஆஸ்திரேலியாவின் சவுத் வேல்ஸ் காவல்துறை, கனடாவின் மோசடி எதிர்ப்பு நிலையம் ஆகியவற்றுடன் சிங்கப்பூரின் இணையத் தளபத்திய குழு புலனாய்வுத் தகவல்களைப் பகிர்ந்துகொண்டது.
அதன் மூலம், வெளிநாடுகளில் பாதிக்கப்படவிருந்த 32 பேர் அடையாளம் காணப்பட்டதுடன் கூடுதல் இழப்புகள் ஏற்படுவது தடுக்கப்பட்டது.
இதற்குமுன், காவல்துறை அதிகாரிகள் மோசடிக்கு எதிராக மேற்கொண்ட நான்காம் சோதனை நடவடிக்கை மூலம் 355க்கும் அதிகமானோர் $8.94 மில்லியன் இழப்பது தவிர்க்கப்பட்டது.
ஜூலை 1ஆம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 31ஆம் தேதிவரை அந்த அதிரடிச் சோதனை நடத்தப்பட்டது.
