கடந்த ஆண்டில் பெருவிரைவு ரயில், பொதுப் பேருந்துகள் ஆகியவற்றில் பயணம் செய்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்ததாக நிலப் போக்குவரத்து ஆணையம் வெள்ளிக்கிழமையன்று (ஜனவரி 30) தெரிவித்தது.
இருப்பினும், பேருந்து பயன்பாடு கொவிட்-19 பெருந்தொற்றுக்கு முந்தைய அளவைவிடக் குறைவாகவே இருந்ததாகவும் அது கூறியது.
2024ஆம் ஆண்டில் ரயில் பயணங்கள் நாள் ஒன்றுக்கு 3.41 மில்லியனாக இருந்ததாகவும் அந்த எண்ணிக்கை 2025ஆம் ஆண்டில் 3.49 மில்லியனாக அதிகரித்ததாகவும் அது குறிப்பிட்டது. 2024ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் இது 2.29 விழுக்காடு அதிகமாகும். கிட்டத்தட்ட 78,000 பயணங்களுக்கு அது சமம்.
2025ஆம் ஆண்டில் பேருந்துப் பயணங்கள் நாள் ஒன்றுக்குச் சராசரியாக 3.841 மில்லியனாக இருந்தது. இது 2024ஆம் ஆண்டின் 3.837 மில்லியனுடன் ஒப்பிடுகையில் சற்று அதிகம்.
2019ஆம் ஆண்டில் நாள் ஒன்றுக்குச் சராசரியாக 4.1 மில்லியன் பேருந்து பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன. 2024ஆம் ஆண்டில் சிங்கப்பூரின் பெருவிரைவு ரயில், இலகு ரயில் பயணங்கள் கொவிட்-19 நோய்ப்பரவலுக்கு முந்தைய நிலைகளைவிட அதிகமாக இருந்தது.
2025ஆம் ஆண்டில் இலகு ரகப் பயணங்கள் சற்றுக் குறைந்தன.
2024ஆம் ஆண்டில் சராசரியாக 210,000ஆக இருந்த அந்த எண்ணிக்கை 209,000ஆக கடந்த ஆண்டு சரிந்தது.
டாக்சிகள், தனியார் வாடகை கார்களை உள்ளடக்கிய இடைநில்லா போக்குவரத்துத் துறைக்கான பயணங்களின் புள்ளிவிவரங்களையும் ஆணையம் ஜனவரி 30ஆம் தேதி வெளியிட்டது.
தொடர்புடைய செய்திகள்
டாக்சிகள் குறைவான பயணங்களைப் பதிவு செய்த போதிலும் அத்துறையின் ஒட்டுமொத்த பயணங்கள் அதிகரிப்பைக் கண்டன.
2024ஆம் ஆண்டில் 431,000ஆக இருந்த தனியார் வாடகை கார் பயணங்களின் எண்ணிக்கை 6.7 விழுக்காடு அதிகரித்து 2025ஆம் ஆண்டில் 460,000ஆக இருந்தது.
டாக்சி பயணங்கள் தொடர்ந்து சரிந்தன. சராசரியாக, 2025ஆம் ஆண்டு தினசரி டாக்சி பயணங்கள் 166,000 ஆக இருந்தது. இது 2024ஆம் ஆண்டில் 187,000ஆக இருந்ததை விடக் குறைவாகும்.
2023ஆம் ஆண்டு, இந்த எண்ணிக்கை 209,000ஆகவும் 2019ஆம் ஆண்டு 353,000 ஆகவும் இருந்தது.

