சிங்கப்பூரில் மார்ச் 19ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி வரை தீவுமுழுதும் கனமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இக்காலகட்டத்தில் மிதமானது முதல் கனமழை பெய்யும் என்பதால் வெப்பநிலை கிட்டத்தட்ட 22 டிகிரி செல்சியசாகக் குறையக்கூடும் எனச் சிங்கப்பூர் வானிலை ஆய்வு நிலையம் திங்கட்கிழமை (மார்ச் 17) முன்னுரைத்துள்ளது.
சிங்கப்பூர் தற்போது பருவமழைக் காலத்தின் இறுதிக் கட்டத்தில் உள்ளது. இம்மழை மார்ச் இறுதிவரை நீடிக்கும் எனக் கூறப்பட்டது.
மேலும், ஒட்டுமொத்தமாக, 2025 மார்ச் மாதத்தின் இரண்டாம் பாதியில் மழைப்பொழிவு தீவின் பெரும்பாலான பகுதிகளில் சராசரியை விட அதிகமாக இருக்கும் என வானிலை மையம் கூறியது.
முன்னதாக, இந்த ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி தொடங்கி ஜனவரி 13ஆம் தேதி வரையிலும் அடுத்து, ஜனவரி 17ஆம் தேதி தொடங்கி ஜனவரி 19ஆம் தேதி வரையிலும் என இரண்டு முறை மிக அதிகமாக மழை பெய்தது.
முதல் முறை பெய்த கனமழையின்போது சாங்கியில் மட்டும் இரு நாள்களில் மொத்தம் 255.2 மில்லி மீட்டர் மழை பதிவானது.
இது தீவின் சராசரி மாதாந்தர மழைப்பொழிவை விட அதிகமாகும்.